பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

இரண்டையும் மேஜர் மக்காலே தலைமையில் கமுதிக்கு அனுப்பி வைத்தனர். இப்பொழுது போர் மிகவும் உக்கிரமாக நடந்தது. மக்காலேயின் பிசாசுத் தாக்குதலுக்கு முன்னர் கிளர்ச்சிக்காரர்கள் எதிர்ப்பு எடுபடவில்லை. பள்ளிமடத்தில் இருந்த கிளர்ச்சிக்காரர்களும் கமுதி கோட்டைப் போரில் கலந்து கொள்ள ஓடோடி வந்தனர். ஆனால் அதற்குள் போரின் போக்கு மாறிவிட்டது. பரங்கிகளது கை ஓங்கிவிட்டது.

27-8-1801 ம் தேதி முற்பகல் கமுதி கோட்டை போர் நின்றது. கிளர்ச்சிக்காரர்களில் உயிர் தப்பியவர்கள் மிகவும் குறைவு காலமெலாம் வீரவணக்கம் செலுத்திப் போற்றும் வரலாற்றை அங்கு கிளர்ச்சிக்காரர்கள் படைத்தனர். கமுதி கோட்டைக்கு வடக்கே வெகு தொலைவு வரை பிணக்குவியல்கள் காணப்பட்டன. பிறந்த மண்ணின் மானங்காக்கப் போராடிய மறவர்களது மகத்தான தியாகத்தை நினைவு படுத்தும் வகைகளில் அந்தக் குவியல்கள் ஆங்காங்கு காணப்பட்டன. கிளர்ச்சிக்காரர் அணியைச் சேர்ந்த ஏழு “சேர்வைக்காரர்கள்” அந்தப் போரில் மடிந்தனர். இது ஒரு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அத்துடன், அபிராமம் அருகில் நடந்த போரில் மட்டும் நானுாறு போராளிகள் பலியானார்கள்.[1]

இந்தப்போரில் பரங்கிகளது பீரங்கித் தாக்குதலைப் போன்று எட்டப்பனது எடுபிடிகள் தாக்குதலும் மிருகத்தனமாக இருந்தது. அத்துடன் மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரைப் பின்பற்றி கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி வந்த சித்திரங்குடி, ஆப்பனுார் நாட்டார்கள் போர் கடுமையாக நடக்கும் பொழுது போராளிகளைக் காலை வாரிவிட்டதுதான் கொடுமையிலும் கொடுமையாக இருந்தது.[2] பரங்கிகள் அணியில் இராமநாதபுரம் மறவர்கள் இருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் மனம் மாறிவிட்டனர் போலும்!

கர்னல் மில்லரும் அவனது கூலிப்பட்டாளமும் கிளர்ச்சிக்காரர்களை சிக்கல் வரை பின் தொடர்ந்து விரட்டி பேரிழப்புக்களை உண்டாக்கினர். ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் தளர்ச்சியடையவில்லை. அவர்கள் இராமநாதபுரம் கோட்டையைத் தாக்கி மீட்பதற்குத் திட்டமிட்டனர். அப்பொழுது கேப்டன் மக்ளாயின்


  1. Military Consultations vol. 286-pp 6854-56
  2. Military Consultations vol. 288(A) (27-8-1801) p. 6855