பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

பொறுப்பில் கோட்டையின் பாதுகாப்பு திருத்தி அமைக்கப்பட்டு இருந்தது. தாக்குதலை ஊமைத்துரையும் பெரிய மருதுவின் மக்களும் மூவாயிரம் பேருடன் தொடருவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. காளையார்கோவில் கோட்டையிலிருந்து கிளர்ச்சிக்காரர்கள் அணியும் இராமநாதபுரம் சீமை எல்லையை அடைந்த பொழுது கூடுதலான பாதுகாப்பு உத்திகள் இராமநாதபுரத்தில் ஏற்பட்டு இருப்பதாகவும், கிளர்ச்சிக்காரர்கள் அணி தாக்குதலுக்குப் போதுமானது அல்ல என்றும் ஒற்றர்கள் செய்தி தெரிவித்ததால் கிளர்ச்சிக்காரர்கள் காளையார் கோவிலுக்குத் திரும்பினர்.[1]

இராமநாதபுரம் கோட்டையில் இருந்த கும்பெனியார் அணிகள், இராமநாதபுரத்திலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்தன. அதே நேரத்தில் அறந்தாங்கிப் பகுதியிலிருந்த கிளர்ச்சிக்காரர்களை கேப்டன் பிளாக்பர்ன் இராமநாதபுரம் சீமைக்குள் தெற்கு திசை எல்லைக்குள் நெருக்கித் தள்ளினான், சார்ப்பாய் என்ற ஊரில் பரங்கிகள் அட்டகாசம் செய்தனர். அறந்தாங்கி பகுதியில் கிளர்ச்சிக்காரர்கள் கை ஓங்குவதற்கு அங்குள்ள மக்கள் மிகவும் உதவி வந்தார்கள். பிளாக்பர்னது பயமுறுத்தலையும் மீறி இவர்கள் கிளர்ச்சிக்காரர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கி வந்தனர்.[2] இதனால் கோபங்கொண்ட பிளாக்பர்ன் அந்தக் குடியிருப்பைப் சூரையாடிக் கொளுத்துமாறு தென்கொண்டான் என்ற துரோகிக்கு உத்திரவிட்டான். அப்பொழுது தென்கொண்டான் தலைமையில் எழுநூறு கைக்கூலிகள் இருந்தனர். பின்னர் இந்த அணியும் இராமநாதபுரம் கலெக்டர் திரட்டிய பதினாயிரம் பேர்கள் கொண்ட பெரும் படையுடன் சேர்ந்து கொண்டு இராமநாதபுரத்திற்கு வடக்கே உள்ள “நாடுகளில்” உள்ள இரண்டாயிரத்து ஐநூறு கிளர்ச்சிக்காரர்களை அழிப்பதில் முனைந்தனர். [3] இந்தக் கூலிப்படையின் முயற்சி முற்றுப்பெறாவிட்டாலும் ஆங்காங்கு உள்ள கிளர்ச்சிக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடினர். சிவகங்கைக்கு வடக்குப் பகுதியில் தொண்டமான் சீமை எல்லையில் காடுகளில் இவ்விதம்


  1. Ibid vol. 288 (A), (21-9-1801), p. 6962
  2. Ibid vol. 288 (A) (15-9-1801), pp. 6844-45
  3. Military Consultations vol 288(A) 11-9-1801 pp. 6954-56