பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசதிக்கேற்ப அமைந்துள்ளன. இராமநாதபுரச் சேதுபதிகளோடு முரண்பட்ட நிலை, பரங்கியரோடு பணிந்தும் எதிர்த்தும் நின்ற நிலைகள் என மருது சகோதரர்களின் அரசியல் நிலைகள், தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மருது சேர்வைக்காரர்கள், மருதிருவர் எனக் குறிப்பிடப்படுகின்றனரேயன்றி வரலாற்று ஆவணங்களில் மருதுபாண்டியர் எனக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பரங்கியரை எதிர்த்து வெளியிட்ட பகிரங்கக் கடிதத்தில் 'மருது பாண்டியன்' என்ற வழக்கு இருப்பதை இந்நூலாசிரியர் குறித்திருப்பது புதிய செய்தி. 'மருதிருவர்' என்ற தலைப்பில் பல்லாண்டுகட்கு முன்பே மறைந்த தமிழறிஞர் டாக்டர் ந. சஞ்சீவி ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்நூலிலிருந்து இந்நூல் எவ்வகையில் மாறுபட்டமைந்துள்ளது என்பதனை நூலாசிரியர் தெளிவாக்கியிருக்கலாம். ஸ்டார் பக்கோடா (பக். 25), பேஷ்குஷ் தொகை (பக். 26,27) சம்பிரிதி (பக். 46) அட்டவணை (பக். 53) போன்ற பொருள் விளங்காத சொற்களுக்கு விளக்கம் தந்திருக்கலாம்.

நல்ல ஆற்றொழுக்கு நடையில் எழுதப்பட்ட ஒரு வட்டார வரலாறு என்ற மனநிறைவு பாற்படுகிறது. பல ஆவணங்களையும், கல்வெட்டு, ஓலை செய்திகளையும் இறுதியில் எடுத்துக் காட்டியிருப்பது மேலும் இப்பொருள்பற்றி ஆய்வார்க்குப் பெருந்துணையாகும். ஆசிரியரின் இச்சீரிய முயற்சியினைத் தமிழுலகம் கட்டாயம் வரவேற்கும் ஆசிரியர் மேன்மேலும் இத்தகு முயற்சியில் ஈடுபட்டு நல்ல நூல்களை அளிக்கவேண்டும் என வாழ்த்துதுகின்றேன்.

14.10.1989

டாக்டர் விசயவேணுகோபால்