பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

யது. அவனுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு என்று ஒரு குழுவினைக் கும்பெனியார் அமைத்ததிலிருந்து அந்த மாவீரனது போராட்டத்தினால் பரங்கிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. இந்த “நீதி விசாரணைக்குழு” கிளர்ச்சிக்காரர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்து, கசையடிகள், நாடுகடத்தல் போன்ற மோசமான கொடும் செயல்களினால் “நீதியை” நிலை நாட்டியது. இராமநாதபுரம் உதவிக்கலெக்டரும், கர்னல் மில்லரும் இந்தத் தண்டனைகளை நிறைவேற்றி வந்தனர். இராஜ சிங்கமங்கலத்தைச் சேர்ந்த ஜகந்நாத ஐயன் என்ற கிளர்ச்சித்தலைவருக்கு ஓராயிரம் கசையடிகளை வழங்கி, அவரது அனைத்து சொத்துக்களையும் கும்பெனியார் உடமையாக்கியதுடன் ஆறுதல் பெறவில்லை. அவரை வங்கக்கடலுக்கும் அப்பால் நாடு கடத்தி மனநிறைவு பெற்றது. கும்பெனி நிர்வாகம்.[1]பிறந்த பொன்னாட்டின் மீது பாசம் கொண்டு அதனுடைய விடுதலைக்கு உழைத்தது. ஏகாதிபத்திய வெறியர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போரிட்டது.இவைதான் இந்த தியாகி புரிந்த “அக்கிரமங்கள்”.

இராமநாதபுரத்திற்கும் தொண்டிக்கும் இடைப்பட்ட இராமநாதபுரம் சீமைப்பகுதியில், கும்பெனியாரது ஆசைக்கனவுகளுக்கு எதிராக அணி சேர்த்து. கிளர்ந்து எழுந்த நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் பட்டியலில் இந்தக் குமாரத்தேவனும், ஜகநாத ஐய்யனும் சிறப்பிடம் பெற்று இருந்தனர் என்பதை அவர்கள் பெற்ற பரிசுகளில், இருந்து தெரியவருகிறது. அவர்கள் நடந்து சென்றபாதையில் நாட்டு விடுதலையில் நாட்டங்கொண்ட ஆயிரக்கணக்கானோர், ஏனைய தியாகிகளுடன் அணி திரண்டு ஆர்ப்பரித்து கும்பெனியாரை எதிர்த்துப் போராடிய பொழுது அடக்கு முறை கொடுமைகளுக்கு அஞ்சிய, நெஞ்சுரமும் நேர்மையும் இல்லாத கோழைகள் சிலரது துரோகமும் சுயநலமும், பாற்கடலில் கலந்த நஞ்சைப்போன்று விடுதலைப் போராட்டத்தை மிகவும் பாதித்தது. வெற்றிக்குப் பதிலாக வீழ்ச்சிக் கொடி காட்டியது. இந்தக் கயவர்களது கோழைத்தனத்தால் போராளிகளின் தாக்குதலும் முன்னேற்றமும் தடைப்பட்டதுடன் அவர்களது போராட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களும், வெடிமருந்தும் வெளியில் இருந்து பெறுவதும் இல்லாமல் போய்விட்டது.


  1. Madurai District Records vol. 1219. (25-10-1801)