பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112



இலங்கையில் இருந்த டச்சுக்காரர்கள் இந்த ஆயுதங்களைக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி வந்தனர். தொண்டிக்கும் பம்பாய்க்கும் இடைப்பட்ட கடற்பகுதி வழியாக இச்சாதனங்கள் மறவர் சீமைக்குள் நுழைவதை தடுக்கக் கும்பெனியார் சூளர் என்ற பரங்கி தலைமையில் கண்காணிப்பு அணி ஒன்றை நியமித்து இருந்தனர். இவர்களுக்கு இந்தக் கோழைகள் இரகசியமாக துப்புகள் தெரிவித்து வந்ததால் கேப்டன் சூளரது அணி சுறுசுறுப்பாக இயங்கியது. தொண்டிப் பகுதியில், கிளர்ச்சிக்காரர்களின் ஆயுதப்படகுகளை அவன் கைப்பற்றி, அழிக்கவும் முடிந்தது.[1] சிவகங்கைச்சீமைப்போர் நீட்டிப்புக்கு தேவையான உயிர்ப் பொருளான வெடிமருந்துக்கு இப்பொழுது தட்டுப்பாடு ஏற்பட்டது. மறக்குடி மக்களது பழமையான ஆயுதங்களான வேல், வாள், வளரி, எறியீட்டி, குத்துவாள் ஆகியவைகளைக் கொண்டு துப்பாக்கியையும் பீரங்கியையும் துணைகொண்டு போராடும் கும்பெனியாரை எதிர்த்து எத்தனை நாட்களுக்குப் போராட முடியும்? சிவகங்கைக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இடர்ப்பாடு இது. என்றாலும், இலட்சியத்தில் இடைவிடாது இணைந்து இருந்த அவர்களது அக்கரையும் ஆவேசமும் இந்தக் குறைபாட்டினைப் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. அவர்களது போர்த் திறன் வெடிமருந்து ஒன்றில் மட்டும் புதைந்து இருக்கவில்லையே! உலகையே வெற்றி கொள்ளலாம் என்ற நினைப்பு ஏற்பட்டு விட்டால், உடல் அவர்களுக்கு பெருஞ்சுமையென எண்ணுவார்கள். அதில் பொருந்தியுள்ள புனித உயிரை வழங்கிப் புகழையும் சம்பாதிக்கும் பெரு விருப்பு உள்ளவர்கள் அவர்கள்.[2]

  1. Military Consultations, vol. 288 (A) (10-9-1801).
    p p. 6857-58 (24-9-1801) p.p. 686о.
  2. ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி பாடல் எண். 354

    “உலகு கைப்படும் எனினும் அது ஒழிபவர்
        உடல் எமக்கு ஒரு சுமை என முனிபவர்
    உயிரை விற்று உறுபுகழ் கொள உழல்பவர்
        ஒருவர் ஒப்பவர். . . . . ...”