பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9

காளையார் கோவில் நோக்கி

ஜீலை மாதம் 30, 1801ம் ஆண்டு காளையார் கோவிலை அடுத்து இருந்த அரண்மனை சிறுவயல் கிராமம் ஆங்கிலக்கும் பெனியார் கைவசமாகியது. மருது சேர்வைக்காரர்களது மாளிகைகள் அமைந்து இருந்த அழகிய ஊர். அங்கு வீதிகள் விசாலமாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், இன்னும் அழகை விட தூய்மை மிகுந்த இத்தகைய ஊரை இந்தியாவில் வேறு எங்குமே பார்க்கவில்லை என கர்னல் வெல்ஷ் தமது குறிப்புகளில் வரைந்துள்ளார்.[1] ஒப்புவமை இல்லாத இந்த ஊரை, கும்பெனியார் கைப்பற்றிய பிறகு அது சுடுகாடாக காட்சி அளித்தது. என்றாலும், காளையார் கோவில் கோட்டைக்கான போர் முயற்சிகள் முடுக்கப்பட்டன. அந்த ஊரின் வடபகுதியில் பாசறை அமைக்கப்பட்டு, காளையார் கோவிலுக்கு அரண்மனை சிறுவயலில் இருந்து காடுகள் வழியாக சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பரங்கியரது பொறிஇயலார் அணியுடன் புதுக்கோட்டைத் தொண்டமான் அனுப்பிவைத்த காடுவெட்டி[2] கூலியாட்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களது பாதுகாப்பிற்காக இருநூறு பரங்கிகளும், மலேயா நாட்டு வீரர் அணியும், ஆறு பவுண்டர் பீரங்கிகளும் சென்றன. மறவர் சீமை விடுதலை வீரர்கள் அவர்களைத் தாக்குவதும் மறைந்து விடுவதுமாக இருந்தனர்.

மிக நெருக்கமாகவும், இணைப்பாகவும் வளர்ந்துள்ள காட்டு மரங்களை அழித்து பாதை ஏற்படுத்தும் பணி தொடர்ந்தது. ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்தும் தொடர்ச்சியாக வெடிக்கும்


  1. Col. Welsh : Military Reminiscenes vol. I p. 92.
  2. இந்த கூலியாட்களின் வழித் தோன்றல்கள் இன்னும் புதுக்கோட்டைப் பகுதியில் இருப்பதுடன் தங்களது இயற்பெயருடன் “காடுவெட்டி” என்ற பகுதியையும் பெருமையுடன் இணைத்து வழங்கி வருகின்றனர்.