பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மறவர்களது துப்பாக்கிச் சூடுகள் அந்தப்பணிக்கு இடர்ப்பாடுகள் ஏற்படுத்தி வந்தன. இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தி, காட்டை அழிக்கும் பணியை மேலும் தொடர்வது என்பது மிகவும் சிரமமான செயலாக இருந்தது. மேலும், அதிகமான எண்ணிக்கையில் உள்ள விடுதலை வீரர்கள் மிக நெருக்கமான மரப் புதர்களுக்கிடையில் மறைந்து இருப்பதைக் கண்டு பிடித்து தாக்குவதும் இயலாததாக இருந்தது. இந்த விவரங்கள் 15-8-1801 ஆம் தேதி கர்னல், அக்கினியூ எழுதிய கடிதத்தில் காணப்படுகின்றன.[1] என்றாலும், கூடுதலாக காடுவெட்டிகளை பணிக்கு அமர்த்தினர். அப்பொழுதும் முன்னேற்றம் இல்லை. காடு அடர்த்தியாக இருப்பதால், ஊடுருவிச் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், தமது பணியில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு இல்லை என்பதை கும்பெனி தலைமைக்கு எழுதிய இன்னொரு அறிக்கையில் அவன் குறிப்பிட்டு இருந்தான்.[2]

இந்தப்பணியில் ஈடுபட்டு இருந்த கும்பெனித் தளபதி கர்னல் வெல்ஷின் குறிப்புக்களில் பரங்கிகளது முயற்சியும் அதற்கு விடுதலை வீரர்கள் ஏற்படுத்திய இடைஞ்சல் பற்றியும் கூடுதலான விவரங்கள் காணப்படுகின்றன. அந்தக் குறிப்புக்களில் இருந்து;[3]

1801 ஆகஸ்டு முதல் நாள்

“மேஜர் ஷெப்பர்டு குதிரைப்படை அணியுடன் சென்று இருகல் தொலைவு தூரம் சென்று ஒரு சிற்றுரை அடைந்தார். அங்கே தங்கி இருந்த இருநூறு கிளர்ச்சிக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். அவர்களும் நமது அணியின் மீது பதில் தாக்குதல் தொடுத்து சுட்டுவிட்டு மறைந்து விட்டனர். மேஜர் மக்லாயிட் தலைமையில் காட்டை அழிக்கும் பணி தொடர்ந்தது. மாலை வரை முக்கால்மைல் தூரம் வரை பாதை ஏற்படுத்தித் திரும்பினர். அப்பொழுது தொடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் மட்டும் கொல்லப்பட்டனர்.


  1. Military Consultations, vol 288 (A). (15-8-1801) p. 6838.
  2. Ibid, (21-8-1801) p. 6840
  3. Col. Welsh: Military Reminiscances (1831)vol. I, pp.92-122.