பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தெரிந்தது. என்றாலும், எதிரிகள் நமது அணியைத் தொடர்ந்து வந்து சில கால்நடைகளையும் குடிகளையும் வெட்டி வீழ்த்தினர்.

எதிரிகள் அணியில் மிகவும் நம்பிக்கையான பணியில் ஈடுபட்டு இருந்தவர் உடையாத் தேவரது மாமனாரும் ஒருவர். இன்று மாலையில், அவர் நமது அணிக்கு தப்பித்து வந்தார். நமது பாசறையின் பக்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் நமது தரப்பிற்கு அவர் ஓடி வருவது இலகுவாக அமைந்தது. தமது தலைவர்களது திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நன்கு அறிந்து இருந்த அவர், கர்னல் அக்கினியூனிடம் சீமையின் நிலைமை பற்றியும் நடக்க விருக்கும் போர்கள் பற்றியும் மிகவும் பயனுள்ள தகவல்களைத் தெரிவித்தார். கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் சென்ற அணி பயன் ஏதும் இல்லாமல் பாசறை திரும்பியது.

ஆகஸ்டு - நான்காவது நாள்

இயல்பான அணியுடன் சென்ற கர்னல் அக்கினியூ வெட்டப்பட்ட குழி ஒன்றுக்குள் இருந்து கொண்டு எதிரிகள் மீது பயங்கரமான தாக்குதலைத் தொடுத்தார். அந்த அணியில் இருந்த பதினெட்டுப் பேர்கள், அந்த இடத்திலேயே பலியாயினர். அப்பொழுது அங்கே வெள்ளை மருதுவைத்தவிர மற்றுமுள்ள அனைத்து தலைவர்களும் இருந்தனர். எதிர்பாராத இந்த கடுமையான சூட்டினால் விடுதலை வீரர்கள் பல பகுதிகளிலும் சிதறி ஓடினர். மாலை ஐந்து மணிக்கு இந்த அணி பாசறைக்குத் திரும்பியது. ஐநூற்று என்பது கஜம் தொலைவு வரை பாதை அமைக்கப்பட்டது. இன்றைய தாக்குதலில் நமது தரப்பில் நான்கு வெள்ளையரும் ஒன்பது சுதேசிகளும் கொல்லப்பட்டனர். காயமுற்றனர். மேஜர் கிரகாம், ஏராளமான தேவையான பொருட்களுடன் வந்து சேர்ந்தார்.

ஆகஸ்டு மாதம் - ஐந்தாம் நாள்

இன்று மேஜர் ஷெப்பர்டின் தலைமையில் சென்ற அணிக்கு அசாதாரண எதிர்ப்பு எதுவும் இல்லை, நானூற்று ஐம்பது கஜ தொலைவு பாதையை அமைத்துத் திரும்பினர். இனிமேல் அமைக்கப்பட வேண்டிய பாதையில் மிகவும் அடர்த்தியான காடு அமைந்து இருந்தது. இன்றைய தாக்குதலில் ஒரே ஒருவர் மட்டும் காயமடைந்தார்.