பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


ஆகஸ்டு ஆறாவது நாள்

இன்று மேஜர் கிரகாம் தலைமையில் சென்ற அணி, பாதையின் இறுதியில் பெரிய தடுப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டது. எதிரிகள் அங்கு மூன்று பகுதியாக அணி வகுத்து இருந்தனர். அவர்களிடம் நான்கு பீரங்கிகளும் இருந்தன. எதிரிகள் தங்கள் நிலைகளில் மிகுந்த உறுதியுடன் நின்று போராடினர். நமது அணிக்கு மிகுந்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதுடன் பல வீரர்களையும் காயப்படுத்தினர். அவர்களது உக்கிரமான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் நமது அணியினர் தப்பித்து ஓடினர். அவர்களது தரப்பில் மிகுந்த சேதம் ஏற்பட்டு இருக்க வேண்டும். காட்டில் பல இடங்களில் அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்து கிடந்தது. நமது அணிகளுக்கு மிகவும் அதிகமான சேதம். மாலை நேரத்திற்குள் இருநூற்று முப்பத்து ஏழு கஜம் வரை பாதை வெட்டப்பட்டது.

ஆகஸ்டு - ஏழாவது நாள்

நேற்றைய போரின் பொழுது வைத்து இருந்த தற்காப்பு நிலையை இருத்தி வைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மீண்டும் அந்த நிலை கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. எதிரிகள் அவர்களது பீரங்கிகளையும், அவர்கள் தரப்பில் இருந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் எடுத்துச் சென்று விட்டனர். லெப்டினன்ட் கீல் தலைமையிலும், மேஜர் பெர்ஷன் தலைமையிலும் இரண்டு அணிகள் எதிர் எதிர் திசையில் அனுப்பப்பட்டன. மேலும் எதிர்ப்பு தென்படவில்லை. முன்னூற்று ஐம்பது கஜ தொலைவிற்கு காடு வெட்டி அழிக்கப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டது.

ஆகஸ்டு - எட்டாவது நாள்

கர்னல் தால்ரிம்பிள் தலைமையில் பாதுகாப்பு அணி அனுப்பப்பட்டது. மீண்டும் அந்தப்பாதை முன்னால் தடுக்கப்பட்டு இருந்தது. லெப்டினண்ட் பிளச்சர் தலைமையிலான அணி எதிரிகளைத்துரத்தி அடித்தது. நம்மை நோக்கி அவர்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தனர். அவர்களுடன் ஒப்பிடுகையில் நமக்கு சேதம் மிகவும் குறைவு. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் காளையார்கோவில் கோபுரம் நன்கு தெரிந்தது. ஐநூறு கஜம் தொலைவு வரை காடு வெட்டப்பட்டு பாதை அமைத்துத் திரும்பப்பட்டது.