பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

பாசறைக்குத் திரும்புவதற்கு மேஜர் பெர்லன் முடிவு செய்தார். அப்பொழுது பெருமழையும் பெய்யத் துவங்கியது.

ஆகஸ்டு - பதினெட்டாவது நாள்

கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் சென்ற அணி, நேற்றைய பாதையில் மேலும் ஜந்நூறு கஜ தொலைவுவரை காட்டை வெட்டி பாதை அமைத்தது. எதிர்பாராத வகையில், எதிரிகள் பலமாகத் தாக்கினர். பலர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயமுற்றனர், கர்னல் இன்னிங்ஸ் உயிர் தப்பி ஓடிவந்தார்.

ஆகஸ்டு - பத்தொன்பதாவது நாள்

எதிரிகளது பீரங்கிகளை இன்று எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்ற முடிவில், தேர்தெடுத்த வீரர்களைக் கொண்டு அணியினை கர்னல் இன்னிங்ஸ் அமைத்தார். பரங்கிகளும் சுதேசிகளுமான எண்ணுாறு போர் வீரர்களைக் கொண்ட அந்த அணி, இரண்டு ஆறு பவுடர் பீரங்கிகளுடன் புறப்பட்டது. கேப்டன் பாக்ஷல், லெப்டினன்ட் கோர்டன் ஆகியோர்களுடன் நேற்று சென்ற வழியில் சென்றோம். அந்த கண்மாய்க்கரையை ஒதுக்கி தென்கிழக்காக இருநூறு கஜம் விலகிச் சென்று இன்னொரு கரைக்கு அறுபது கஜம் முன்பாகப் போய்ச் சேர்ந்தோம். அப்பொழுது எதிரிகள் தாக்கத் தொடங்கினர். கேப்டன் வெங்டன் அங்கு ஒரு பீரங்கியை நிறுத்தி வைத்தார். மிகவும் வேகமாக முன்னேறி காடு வெட்டும் பணியைத் தொடருமாறு உத்திரவிட்டார். அதிக நேரமும் உழைப்பும் தேவைப்படும் அந்தப்பணியைத் துவக்கும் பொழுது எதிரிகளது துப்பாக்கி வேட்டுச் சத்தம் இடைவிடாது கேட்டது. அங்கிருந்து சற்று தொலைவில் அவர்கள் தாக்குதலுக்கு தங்கள் அணியினை ஆயத்தம் செய்கிறார்கள் என்பதற்கான அறிகுறி என உணர்ந்தோம். கால்மணி நேரம் அமைதி நிலவியது. முற்பகல் 10 - 30 மணிக்கு எங்களைச் சுற்றி நாலாபுறமும் பயங்கரமான துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன. எதிரிகள் எங்களுக்கு மிக அண்மையில் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் அவர்களைக் கண்டு கொள்ள இயலவில்லை. அவர்கள் எங்களை நெருங்கி வருவதாகத் தோன்றியதால், நாங்கள் அனைவரும் நான்கு வரிசைகளாக அணிவகுத்து நின்றோம். ஒவ்வொரு அணியிலும் ஒரு பீரங்கி இருந்தது. எங்களை நோக்கி பத்துக்கஐ