பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


ஆகஸ்டு .இருபத்து ஐந்தாவது நாள்

மேஜர் பெர்ஷன் தலைமையிலான அணியை மாலையில் எதிரிகள் தாக்கினர். அவர்கள், இப்பொழுது நமக்கு நேராக எதிரே வந்து குண்டுமாரி பொழிந்தனர். வேலை செய்ய இயலாத நிலையில் பாசறை திரும்பிய அணி சுட்டபொழுது ஒருவர் மாண்டார். அவரது சடலத்தை எதிரிகள் எடுத்துச் சென்று விட்டனர்.

ஆகஸ்டு - இருபத்து ஏழாவது நாள்

மேஜர் ஷெப்பர்டின் அணி, கர்னல் இன்னிங்ஸ் அணியின் பாதுகாப்பிற்குச் சென்றது. பதினான்கு மைல் தொலைவில் உள்ள திருப்பத்தூருக்கு அந்த அணியுடன் நானும் சென்றேன். இரவு முழுவதும் ஆயுதங்களைக் கையில் பிடித்தவாறு உறங்கினோம்.

ஆகஸ்டு - இருபத்து எட்டாவது நாள்

திருமெய்யம் திக்கில் இருந்து கேட்ட வெடிச்சத்தம் கர்னல் இன்னிங்ஸ் அணியினர் வந்து கொண்டிருப்பதை உணர்த்தியது. நாங்களும் அவர்களுடன் இணைந்து கொள்ளச் சென்றோம். ஆனால் உடனே திரும்பிச் சென்று திருப்பத்தூர் கோட்டையை, எதிரிகள் வந்து வளைத்துக் கொள்வதற்குள், கைப்பற்றி வைத்துக் கொள்ளுமாறு எங்களுக்கு உத்திரவு. கட்டளைப்படி நாங்களும் அந்தப் பழைய கோட்டைக்குச் சென்று உள்ளும் வெளியிலும் ஆயத்த நிலையில் இருந்தோம். மாலையில் பலத்த மழை பெய்தது. என்றாலும் நாங்கள் மிகுந்த விழிப்புடன் காத்து இருந்தோம்.

ஆகஸ்டு - இருபத்து ஒன்பதாவது நாள்

பொழுது புலர்ந்ததும் நமது அணி புறப்பட்டது வழியில் சில மோதல்கள்; எதிரிகளது தாக்குதல் இருந்தன. திருப்பத்தூரில் இருந்து ஏழுகல் தொலைவில் உள்ள பட்டமங்கலம் ஊர்போய்ச் சேர்ந்தோம். பக்கத்தில் உள்ள கண்மாய்க்கரை வழியாகச் சென்று அந்த ஊரைச் சுற்றி வளைத்துக் கொண்டோம். எதிரிகளது தாக்குதல் தொடர்ந்தது. நமது “சப்ளை” அணியைத் தடுப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட கடைசி நிலை இது.