பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

மைப்படுத்தி வந்தனர். இத்தகையதொரு இயற்கைச் சூழ்நிலையில் அவர்களை ஒவ்வொரு மணி நேரத்திலும் தாக்கிக் கொண்டு இருந்தாலும், அவர்கள் நம்மை முழுவதுமாக சூழ்ந்து கொண்டு வந்தனர். ஒரு கடிதத்தைக் கூட வெளியில் அனுப்பவோ, அல்லது பெறுவதோ இயலாததாக இருந்தது. தொடர்ந்து ஒரு மாதமாக பாளையங்கோட்டையுடன் தொடர்பே இல்லை. அவர்களது விழிப்பான நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்கு பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றுகூட பயனளிக்கவில்லை. எனக்கு பழக்கமான பாளையக்காரர் ஒருவர் – இந்தப்பகுதியின் மூலை முடுக்குகளையெல்லாம் அறிந்து இருந்தவர் – ஒவ்வொரு மனிதரையும் புரிந்து இருந்தவர் – நமக்கு உதவுவதற்கு முன்வந்தார். ஐந்து பணத்தையும் ஒரு கடிதத்தையும் பெற்றுக்கொண்டு காட்டிற்குள் சென்ற அவரை எதிரிகள் பிடித்து கொன்று போட்டனர்... ...”

இவ்விதமாக சிறுவயல் பாசறையில் இருந்த கர்னல் வெல்ஷ் தமது கைப்பட வரைந்துள்ள நாட்குறிப்புகள் பரங்கிகளை எதிர்த்து போரிட்ட போராளிகளது தாக்குதல்களைப் பற்றி ஓரளவு தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு சிறந்த சாதனமாக உள்ளது. அரண்மனை சிறுவயலுக்கும் காளையார்கோவிலுக்கும் இடைப்பட்ட எட்டுக்கல் தொலைவு காட்டைக் கடப்பதற்கான பாதையை அமைக்க நூற்றுக்கணக்கான பரங்கியரும் ஆயிரக்கணக்கான காடு வெட்டிகளும் முப்பத்திரண்டு நாட்கள் முனைந்தும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சிவகங்கை சீமைப் போராளிகளைச் சமாளித்ததே ஒரு பெரிய சாதனையாகும். ஆனால் இந்தச் சாதனையையும் விஞ்சும் வகையில் விடுதலை வேட்கையும், ஏகாதி பத்திய எதிர்ப்பு உணர்வும் இதய நாதமாகக் கொண்ட போராளி கள் பயிற்சியும் வெடி மருந்து வசதியும் கொண்ட பரங்கிகளை பயமின்றிச் சாடியது ஆகும். மரணத்தைப்பற்றி சிறிதும் சிந்தியாமல் அந்த மண்ணிற்குரிய மகத்தான மறப்பண்புகளுடன், பயங்கரமாக வெடிக்கும் துப்பாக்கி, பீரங்கி குண்டுகளுக்கிடையில் போரிட்டு மடிந்த போர் மறவர்களின் புனித இடம் அந்த காட்டுப் பாதையைத் தவிர தமிழகத்தில், ஏன் பாரதத்தில் வேறு எங்கும் கிடையாது! சிவகங்கைச் சீமை மண்ணை அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு அடி நிலத்திற்கும் அவர்கள் கொட்டிய குருதியையும் உடலில் தாங்கிய குண்டுகளையும், இறுதியில் தங்களையே தடுப்புச் சுவர் ஆக்கி ஆங்காங்கு விழுந்து இறந்த தியாகத்தையும் வேறு எந்த வரலாற்றிலும் காண முடியாது!