பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இறுதிப் போருக்கு

சிவகங்கைச் சீமையின் சீர்மிகு ஊர்களில் சிறந்தது காளையார்கோவில். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பல பேரரசர்களை அமைத்து ஆட்சி செய்து வந்தான் வேங்கை மார்பன் என்ற வீரன். பாண்டியன் மீது பெரும்படை நடத்தி வந்த சோழன் பெருநற்கிழியை நெடுஞ்செழியன் வெற்றி வாகை சூடிய காரணத்தினால், “தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்” என அவன் போற்றப்பட்டான்.[1] இவனைப் போன்று அக நானூறு தொகுப்பித்த பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என போற்றப்பட்டான்.[2] இந்த இரண்டு செய்திகளில் இருந்து சங்க காலத்தில் இந்த ஊருக்கு “தலையாலங்கானம்” “கானப்பேர்” என்ற பெயர்கள் இருந்தமை தெரியவருகின்றன. ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இங்குள்ள இறைவனை வழிபட்ட திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், தங்களது தேவாரங்களில் இந்த ஊரை கானப்பேர் என்றே குறித்துள்ளனர். பாண்டி நாட்டுப் பழம்பதி பதினான்கில் ஒன்றாக வரிசையிட்டுள்ள பழம் பாடல் ஒன்று “கானப்பேர்” என்பதனை “கானை” எனப்பாடுகிறது.[3]

மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாண்டிய மன்னனது வாரிசுப்போரில் தலையிட்டு பல போர்களில் குலசேகர பாண்டியனைத் தோல்வியுறச் செய்த இலங்கை நாட்டு ஜகத்விஜயதண்டநாயகனது ஆக்கிரமிப்பில் இந்த ஊர் சில


  1. சதாசிவ பண்டாரத்தார்: பாண்டியர் வரலாறு (1950) பக், 23-24
  2. சிங்காரவேலு முதலியார் அபிதான சிங் தாமணி (1932), பக் 432
  3. ராகவ ஐயங்கார்: மு.பெருந்தொகை (1935) பாடல் எண் 86