பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

காலம் இருந்ததை வரலாறு குறித்துள்ளது.[1] அடுத்து பதினான்காம் நூற்றாண்டில் எழுந்த மற்றொரு வாரிசுப் போரில் சுந்தரபாண்டியனுக்கு உதவ வந்த தில்லி தளபதி மாலிக் காபூரின் கொள்ளைக்குப் பயந்து, திருவரங்கத்து ஸ்ரீரங்கநாதரது திருமேனியுடன் புறப்பட்டு வந்த பிள்ளை லோகாச்சார்யருக்கு அங்கு புகலிடம் தந்ததாக மற்றுமொரு வரலாற்றுச் செய்தி உள்ளது.[2] இந்த நிகழ்ச்சிக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், தென்னகம் வந்த அரபு நாட்டுப்பயணி திமிஸ்கி, இந்த ஊரை “காய்ன்” என்றும். தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஒன்று என்றும் தமது பயணக் குறிப்புகளில் வரைந்துள்ளார்.[3]

கி. பி. 1451 ல், மதுரை அரசு கட்டிலுக்குரிய பாண்டிய இளவல் யார் என்பதை முடிவு செய்ய முயன்ற மதுரை ஆளுநர் களான விஜயநகர பேரரசின் பிரதிநிதிகள், காளையார்கோவிலில் இருந்த அரண்மனை நடனமாது அபிராமி என்பவரது மகன் பற்றியும் பரிசீலித்ததாகத் தெரிய வருகின்றது.[4] பின்னர் பதினாறு பதினேழாவது நூற்றாண்டில், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது சிறந்த அரண்களில் ஒன்றாகத் திகழ்ந்ததுடன், இங்குள்ள திருக்கோவிலும் அந்த மன்னர்களது திருப்பணியினால் வளர்ச்சி பெற்றது.[5] கி. பி. 1730 ல் இராமநாதபுரம் சீமை பிரிக்கப்பட்டபொழுது இந்த ஊர் சிவகங்கைச் சீமைக்குள் வந்தது.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் விளங்கிய இந்த ஊருக்கு, இயற்கையான காடு அரணாக பல நூற்றாண்டுக் காலமாக இருந்து வந்தது. ஆதலால் இந்த ஊரை சிவகங்கைச் சீமையின் உயிர்நிலை என்று கொள்ளுதல் பொருத்தமானது.


  1. Krishnasamy Ayyangar. S: South India and her Mohamedan Invaders. (1924)
  2. Harirao. V: Koil Olugu (1961) p. 129
  3. Hussain Nainar Dr: Arab Geographers knowledge of South India (1942) p. 64.
  4. Nelson: Manual of Madurai Country (1868) part III
  5. பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் பக். 36 - பணவிடுதூது (1930