பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

ஆதலால் இந்த ஊரின் கோட்டையைப் பரங்கியரது ஆக்கிரமிப்பில் இருந்து காத்து நிற்பதைப் போராளிகள் தங்களது தலையாய கடமை என்றும் அதனைக் கைப்பற்றி சிவகங்கைச் சேர்வைக்காரர்களது செல்வாக்கையும் மூலபலத்தை அழிப்பதை அவர்களது இலட்சியமாகப் பரங்கிகளும் கருதினர். இந்தச் சூழ்நிலையில் மிகப் பெரிய போருக்கு காளையார்கோவில் கோட்டையின் களம் தயாராகி வந்தது.

இந்தப் போரின் முதல் தாக்குதல் காளையர்கோவில் கோட்டையின் மேற்குத்திக்கில் இருந்து துவக்கப்படலாம் என மருது சேர்வைக்காரர்கள் நம்பினர். எதிர்பார்த்தனர்.[1] அதற்குரிய ஆயத்தங்களை வெடிமருந்துப்பொதிகள், தானியங்கள் சேமிப்பு மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆகியவைகளை காளையார்கோவிலுக்குக் கிழக்கிலும் வடகிழக்கிலும் கொண்டு போய் ஆங்காங்கு பத்திரப்படுத்தி வைத்தனர். கிளர்ச்சிக்காரர் அணிகளும் ஆங்காங்கு நிலைகொண்டு இருந்தன. இந்தப்பகுதி அவர்களுக்குப் பத்திரமான நம்பிக்கையான இடமாக அமைந்து இருந்தது. வெளிநாட்டாரது உதவிகளைக் கடல்வழியாகப் பெறுவதற்கும், அந்தப் போரில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் இராமநாதபுரம் சீமையிலிருந்து உதவிகள் பெறுவதற்கும் ஏற்றதாக இருந்தது. ஆனால் எதிரி தரப்பு பலம், வசதிகள், பற்றி புதுக்கோட்டைத் தொண்டமானுடன் இரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட கும்பெனியாருக்கு போராளிகளின் இந்தக் கடல்வழித் தொடர்புகளைத் துண்டித்து விடுவது அவர்களது போருக்கு மிகவும் இன்றியமையாத முன்ஏற்பாடு என்பதையும் இந்த நிலையில் அவர்களை மேற்குத் திக்கில் இருந்து நெருக்குதல் செய்தால் அவர்களது குடும்பத்தினர் ஆபத்திற்கு உள்ளாக்கப்படுவர் என்றும், போரை பதினைந்து நாட்களில் முடித்துவிடலாம் என்றும் தொண்டமான் கர்னல் அக்னியூவிற்கு யோசனை வழங்கினார்.[2] இந்த இருவித இடுக்கித் தாக்குதல் அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது அவர்கள் பயந்து போர் செய்வதை விடுத்து தப்பி ஓடச் செய்யலாம் என்பது அவரது கணிப்பு.


  1. Military Consultations. vol 288,(A)(29-8-1801) pp. 6041-42
  2. Ibid.