பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட பரங்கிகள், காளையார் கோவில் கோட்டையைத் தாக்க மூன்று திசைகளில் இருந்து தங்களது அணிகளை ஈடுபடுத்தினர். கிழக்கில் கர்னல் பிளாக்பர்ன் தலைமையிலும், மேற்கில் இருந்து அக்னியூ, இன்னிங்ஸ் கூட்டுத் தலைமையிலும் தெற்கில் இருந்து மக்காலே தலைமையிலும் அணிகள் முன்னேறி வந்தனர். கிளர்ச்சிக்காரர்களும் தற்காப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் இராமநாதபுரம் சீமையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களை அவர்கள் காட்டு மிராண்டித்தனமாக அடக்கியொடுக்கினர். அன்றைய கால கட்டத்தில் எந்த நாட்டிலும், எந்த ஆக்கிரமிப்பாளரும் மேற்கொள்ளாத மிக மோசமான நடவடிக்கைகளை பரங்கிகள் மேற்கொண்டனர். தங்களுக்கு எதிரான நடவடிக்கையில் முனைந்தவர்களை இரு வழிகளில் சமாளித்தனர். முதலாவது சம்பந்தப் பட்ட கிளர்ச்சிக்காரரது உள்ளூர் உறவினர்களை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவது மற்றது கிளர்ச்சிக்காரர்களைச் சித்திரவதை செய்வது, கசையடிகள், தூக்குத்தண்டனை, அல்லது கடலுக்கு அப்பால் கிளர்ச்சிக்காரரை நாடு கடத்துதல், அவர்களது சொத்துக்களைப் பறித்து கும்பெனி உடமையாக்கிக் கொள்ளுதல்.

இந்தக் கோரமான கொடுமைகளைக் கண்டு பயந்து, கும்பெனியாருக்கு விசுவாசிகளாக மாறிய கெடுபிடிகளை ஊக்கு விக்கும் வகையில் அவர்களுக்கு “கவுல்” காணிகள் வழங்கி ஆதரித்து அவர்களது கோழைத்தனத்தை மறைக்க பாதுகாப்புப் பட்டயங்கள் வழங்கினர். இவைகளை யெல்லாம் அறிந்த சிவகங்கைச்சீமை மக்கள் இயல்பான மனிதாபிமான உணர்வுகளில் மனம் நொந்தனர். அவர்களது இந்தக் குழப்பமான மன நிலையை கும்பெனியாரது இன்னொரு நடவடிக்கையும் பாதித்தது.

சிவகங்கைச்சீமை ஆட்சியில் ராணிவேலுநாச்சியார் இருந்த பொழுதும், அவரது மறைவிற்குப்பின்னரும், சிவகங்கை சீமை மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்ற பிரதானியும், தளகர்த்தராகவும் இருந்தவர்கள் மருது சகோதரர்கள். குறிப்பாகச் சொன்னால், சிவகங்கை அரசியலில், ஏறத்தாழ கி.பி. 1781 முதல் இருபது வரு டங்களாக உண்மையான ஆட்சியாளராக இருந்தவர்கள் அவர்கள். ராணி வேலுநாச்சியாரிடம் பெரிய மருது சேர்வைக்காரர் கொண்-