பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

களாகும். சோழர்களை வெற்றி கொண்டு அழித்த பாண்டியமன்னரின் விருதாவளியான சோழகுலாந்தகன் (சோழர் குலத்திற்கு யமன்) என்ற பொருளில் அடிப்படையில் அமைக்கப்பட்ட சோழ குலாந்தகபுரம் என்ற பெயரின் சுருக்கம் எனக் கொள்வோரும் உண்டு. அந்த ஊரில் பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நகரத்தார் வசித்து வந்தனர். அடக்கத்திற்கும், பணிவிற்கும் பெயர் பெற்ற குடிமக்கள் கும்பெனியாரின் இத்தகைய ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகளில் அக்கரை எதுவும் இல்லாது இருந்தனர்.

சோழபுரம் சிவன் கோயிலில் முன்னர் அலங்காரப்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. பரங்கியரும் அவர்களது விசுவாசிகளான கைக்கூலிகளும் அங்கு குழுமி நின்றனர் சிறப் பான அர்ச்சனைகளை முடித்துவிட்டு படைமாத்துார் கெளரிவல்லப ஒய்யாத்தேவரும் அவரது உறவினர் சிலரும், அந்த அலங்காரப் பந்தலுக்குள் நுழைந்தனர். அங்கு அமர்ந்திருந்த கர்னல் அக்கினியூவும், கர்னல் இன்னிங்ஸாம் எழுந்து வந்து வரவேற்று அவர்களை அங்கிருந்த அலங்கார நாற்காலிகளில் நடுநாயகமாக அமரச் செய்தனர். ராணுவ வாத்தியங்களது முழக்கம் நின்றவுடன், கர்னல் அக்கினியூ, ஒய்யாத்தேவரிடம், சென்னையில் இருந்து கும்பெனி கவர்னர் கிளைவ், அனுப்பி இருந்த “மில்க்கியத் இஸ்திமிரார்” சன்னதை கையளித்து, சிறந்த பட்டாடை ஒன்றையும் அழகான வாள் ஒன்றையும் கும்பெனியாரின் பரிசுகளாக வழங்கி, வாழ்த்துத் தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தான். குழுமி இருந்தவர்கள், “சிவகங்கை ஜமீந்தார் வாழ்க” என ஆரவாரம் செய்தனர். படைமாத்துர் தேவர்மகன் இப்பொழுது மகிழ்ச்சிப்பெருக்கில் மூழ்கிப்போனார். அவரது கண்களில் துளிர்த்துநின்ற ஆனந்தக் கண்ணீர், கடந்த காலத்தின் சில கசப்பான நிகழ்ச்சிகளைப் பிரதிபலித்தன. சிவகங்கைச் சீமையின் அரசியல் வாரிசான அவரை, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், பிரதானிகளான மருது சேர்வைக்காரர்கள் புறக்கணித்து அவமதித்து வந்ததுடன் அல்லாமல் காளையார்கோவில் கோட்டையில் சிறைப்படுத்தி வைத்திருந்தது.[1]


  1. Military Consultations vol. 285 (A) (28-6-1801) – p. 5039