பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


அவரது மணப்பெண்ணாக நிச்சயித்து இருந்த சிவகங்கை ராணிவேலுநாச்சியாரது மகள் வெள்ளச்சியை அரசு உறவினரல்லாத சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவருக்குத் திருமணம் செய்து வைத்து அவரை சிவகங்கை அரசின் புதிய வாரிசாக ஏற்படுத்தியது.

காளையார் கோவிலில் இருந்து உயிர்தப்பியோடி இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னரிடம் புகலிடம் பெற்று இருந்ததை அறிந்து கும்பெனியார் மூலமாக, இராமநாதபுரம் சீமையை விட்டு வெளியேறுமாறு செய்தது.

அங்கிருந்து அறந்தாங்கியில் குடியேறிய பொழுது, அவரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால் சிவகங்கையில் இருந்து அறந்தாங்கிக்கு ஓடி வந்த அந்தணர் ஒருவரது பெண் மக்கள் இருவரையும் இழிவுபடுத்தி கொடுமை செய்தது.[1]

அறந்தாங்கி காட்டிலும், உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி அவதிப்பட்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தியது,

ஆகிய இந்தக்கொடிய காட்சிகள் சில வினாடிகளில், அவரது நினைவில் நிழலாடியதை அவரது கண்களில் இருந்து வழிந்து விழுந்த நீர்த்துளிகள் மறைத்தன. மருது சேர்வைக்காரர்களைப் பழிவாங்கிவிட்டது போன்ற பெருமிதம் அவரது கண்களில் பளிச்சிட்டது. அளவிட முடியாத மகிழ்ச்சிப் பெருக்கினால் அவர் மெய்சிலிர்த்துப் போனார். நினைத்துப் பாராத வகையில் அவருக்கு அரச பதவி கிடைத்ததினால் அவரது சிந்தனையிலும் கூட தடுமாற்றம் ஏற்பட்டது. இத்தகைய ஆடம்பர வாழ்வை, அரசயோகத்தை வழங்கிய பரங்கிகளது பெருந்தன்மை விசுவ ரூபமாக அவருக்குப்பட்டது. நன்றி மறப்பது நன்று அல்லவே! தமது இருக்கையில் இருந்து எழுந்த ஒய்யாத்தேவர், அக்கினியூவின் முன் சாஷ்டாங்கமாக விழுந்தார். வெள்ளையனின் கால்களை முத்தமிட்டு எழுந்தார். அவரைப் போன்றே அவரது சகோதரரும் கர்னல் இன்னிங்ஸ் கால்களில் விழுந்து அஞ்சலி செலுத்தி எழுந்தார்.[2] இந்த நாட்டில் ஆண்டானுக்கு அடிமை செலுத்தும் வணக்கமுறை அதுதானே !


  1. Military Consultations vol. 285, (28-6-1801) p. 5038-43
  2. Col. Welsh: Military Reminiscences. (1881) vol. II.