பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


ஆனால் முடிமன்னர் களாஞ்சி ஏந்தும் சமயத்தில் தான் சேதுபதி மன்னர் முடி சற்று தாழும் எனப் பாடிய புலவரது[1] பொய்யாமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னரது மகளை மணந்து, மருகராகும் பெருமைபெற்ற நாலுகோட்டை பாளையக்காரரது வழித் தோன்றலான ஒய்யாத் தேவர், இத்தகைய இழிவான முறையில் பரங்கியின் பாதங்களுக்கு தலையினால் அருச்சனை செய்ததை யாரும் எதிர்ப்பார்த்து இருக்கமாட்டார்கள். என்றாலும் இந்த இழிந்த விபரீதமான, ஆனால் உண்மையான, நிகழ்ச்சியை நேரில் கண்ணுறும் வாய்ப்பு பெற்ற பரங்கித்தளபதி வெல்ஷ் தமது நாட்குறிப்புகளில் தெளிவாக வரைந்து வைத்துள்ளார். சுயநலத்திற்காக சொந்த பதவிகளுக்கு எதையும் துணிந்து செய்யும் ஈனப்பிறவிகளில் இத்தகைய மானமற்ற செய்கையினால் மறவர் சீமை மக்கள். தன்மானத்தைத் துறந்து தொன்மையான மறப்பண்புகளை மறந்து, அவமானத்தால் கூனிக்குறுகி கொத்தடிமைகளாக, என்றும் பரங்கியரிடம் மண்டியிட்டு வாழவேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காகவே அந்த உண்மை நிகழ்ச்சியை அந்த தளபதி குறித்து வைத்து இருக்க வேண்டும்.

சிவகங்கை ஜமீந்தாரது நடவடிக்கை, தொடர்ந்து கும் பெனியாரது கட்டளைகளை தலைமேல் கொண்டு நிறைவேற்றும் “தனிப்பண்பு” கொண்டதாக இருந்ததை படைமாத்தூர் கெளரி வல்லப ஒய்யாத்தேவர். தமது கண்கண்ட தெய்வமாகிய கும்பெனியாருக்கு எழுதிய கடிதம் ஒன்று, உறுதிப்படுத்துகிறது. அந்தக் கடிதத்தில், “.....கும்பெனியார் சம்பந்தப்பட்ட கடிதப் போக்குவரத்தில் சிறப்பான அக்கரை செலுத்தி, ஒரு வினாடி கூட தாமதம் இல்லாமல், தங்களது ஆணைகளை நிறைவேற்றி வைப்பேன். தங்களுடைய பிள்ளை என்ற முறையில், தாங்கள் என்மீது பரிவும் பாசமும் கொண்டவர்களாக நடந்து கொள்ளும்படியும். தங்களது ஆணைகளை அப்பொழுதைக்கப்பொழுது எனக்கு அருள் கூர்ந்து தெரிவிக்கும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் எழுதியிருந்தார்.[2]

  1. மீர் ஜவ்வாது புலவர்:பெருந்தொகை (1932) பாடல் எண் 952
  2. Madurai District Records vol. No 1178 - (30-12-1801) p. 100.