பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

இரகசியத் திட்டம்

பொது மக்களது நினைவாற்றல் மிகவும் பலவீனமானது என்ற அரசியல் அறிஞர் ஒருவரது கணிப்பு சிவகங்கைச்சீமை மக்களைப் பொறுத்த வரையில் அன்று நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது. கி.பி. 1772ல் நடைபெற்ற காளையார்கோவில் போரில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர், வெள்ளையரது குண்டுபட்டு வீரமரணம் அடைந்தார். அதனால், சிவகங்கைச் சீமையை ஆக்கிரமித்த ஆர்க்காட்டு நவாப்பும், கும்பெனியாரும், மக்களது உடமைகளைச் சூறையிட்டு சொக்கப்பானை கொளுத்திக் கொண்டாடிய நேரம். தலைமை இல்லாது தடுமாறிய மக்களது வேதனை, விடியாத இரவாக நீண்டுகொண்டு இருந்தது. விரக்தி கொண்ட மக்கள் பொறுமை இழந்து, தங்களது மண்ணை மாசுபடுத்தும் அன்னிய அதிகார வர்க்கத்தை விரட்டியடிக்க எட்டு ஆண்டுகாலம் போராடிப்பார்த்தனர். பலன் இல்லை, இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில் தாயகத்தை மீட்பதற்கு ஓடோடி வந்தனர் மருது சகோதரர்கள். அவர்களுடன் திண்டுக்கல் கோட்டையில் இருந்து மைசூர் மன்னர் ஐதர்அலிகான் வழங்கிய ஐயாயிரம் குதிரை வீரர்களுடன்.[1] கும்பெனியாரும் நவாப்பும் கூட்டாக பங்கு போட்டுக் கொண்டு இருந்த சிவகங்கை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

திருப்பூவணம், சிவகங்கை, ஒக்கூர், திருப்பத்துார் ஆகிய ராணுவ நிலைகளில் இருந்து நவாப்பின் படைகள் துரத்தியடிக்கப்பட்டன. கும்பெனியாரது கூலிப்படைகளும் ஓட்டம் பிடித்தன. மீண்டும் சிவகங்கைச்சீமை மானம் மிகுந்த மறவர் சீமையாகியது. குழப்பங்களும் அரசியல் கெடுபிடிகளும் இல்லாது மக்கள் வாழத்


  1. Correspondence on the Permanent Settlement of the Southern Pollams p. 28