பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

தக்க அரசியல் அமைப்பை சிவகங்கை சேர்வைக்காரர்கள் ஏற்படுத்தினர். முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவரது விதவை ராணி, வேலுநாச்சியார், சிவகங்கை அரசின் தலைவியாக இருந்தாலும், உண்மையான ஆட்சி மருது சேர்வைக்காரர் கைகளில் இருந்ததால் மக்கள் ஆறுதல் பெறத்தக்க பல அரிய செயல்களை அவர்கள் நிறைவேற்றி வைத்தனர். அதனால் சாதாரண மக்கள் ராணியைவிட பிரதானிகளான மருது சேர்வைக்காரர்களைத் தான் மிகுதியாகத் தெரிந்து பாராட்டிப் புகழும் வாய்ப்பு இருந்தது.

மதுரைக்கோபுரம் தெரியக்கட்டியவர்கள் எனப்புகழத்தக்க வகையில் காளையார்கோவிலின் தெற்கு கோபுரத்தை விண்ணகரமாக எழுப்பினர். அதனையடுத்த ஆணைமடு தெப்பக்குளத்தை அழகாகவும் ஆழமாகவும் அமைத்து முடித்தனர். தேனாற்று மாதவர் எனக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிற குன்றக்குடி குமரனது திருக்கோயிலையும் மருதாபுரி குளத்தையும் சீர்திருத்தி அமைத்தனர். “தென் காட்டுத் திருப்பத்துார் திருத்தளியான்” எனத் தேவாரம் சிறப்பிக்கின்ற திருப்பத்துர் ஆலயத்தையும் திருமதிலையும் திறம்பட அமைத்தனர். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சூரக்குடி விசயாலய தேவனால் அமைக்கப்ப்ட்டு மதுரை சுல்தான்களால் சிதைக்கப்பட்ட அந்த ஊர் கோட்டையை அழகுற அமைத்தனர். அன்னசாலை, சத்திரம், இன்னும் கண்மாய்கள், வரத்துக்கால்கள், குளங்கள், கலுங்குகள், எனக் குடிமக்கள் தேவைகள் நிறைவுற அறப்பணிகள் பல அவர்கள் ஆற்றினர். மற்றும் அவர்களுக்கு காலத்தால் மக்கள் செய்த நன்றியினை நெஞ்சில் நிறுத்தி நன்றிக்கடனாக பல தானங்களையும் அவர்கள் வழங்கினர். பசிக்கு பழஞ்சோறு வழங்கிய மூதாட்டிக்கு “பழஞ்சோற்று ஏந்தல்”, கூழ் வார்த்த குடிமகனுக்கு “கூமூர்”, பணியாரம் அளித்துப் பசியாற்றிய பெண்ணுக்கு “பணியார ... ... நல்லூர்” ஆபத்தின் பொழுது அடைக்கலம் அளித்துக் காப்பாற்றிய சேசு சபைத் தொண்டரது தேவாலயத்திற்கு மாறணி என்ற சிற்றுார். மதுரைச் சொக்கர் ஆலயத்து திருவிளக்குச் செலவிற்கு “ஆவியூர்”; குன்றக்குடி குமரர் அருள்பெற செம்பொன்மாரி கிராமம்; மயூரகிரிக் கோவை பாடி வந்த புலவருக்கு மருதங்குடி கிராமம் இவையனைத்தும் மருது சேர்வைக்காரர்கள் முள்ளால் வரைந்து, சொல்லால் வழங்கிய தானங்கள்.

இவ்விதம், சிவகங்கைச் சீமையின் ஒப்பற்ற ராஜ மான்யராக அரசியலை நடத்திய மருது சேர்வைக்காரர்களின் மாண்புகளை