பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


மக்கள் சில நிமிடங்களில் மறந்துவிட்டனர். பேராண்மையும், எளிய பண்புகளும் பெற்று இருந்த அந்தப்பிரதானிகளின் புகழுரு வியாபித்து நின்று அவர்களின் சிந்தனையில் பொய்மையான ஆடம்பரமும் விளம்பரமும் துணையாக விளங்கிய பழமையின் பிரநிதி பற்றிய கவர்ச்சி படர்ந்தது. கும்பெனியாரது சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், சிவகங்கைச் சீமை அரச பரம்பரையினர் பற்றி அக்கரை கொண்டனர். சிவகங்கைச் சீமையின் அரசராக ராணி வேலு நாச்சியாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அன்னாரது மகளை மணந்து. சிவகங்கைச் சீமையின் அரசரான சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவர் உயிருடன் இருக்கும்பொழுது, சோழபுரத்தில், “சிவகங்கை ஜமீந்தாராக” படைமாத்தூர் ஒய்யாத்தேவரை கும்பெனியார் விளம்பரப்படுத்த வேண்டிய காரணம் என்ன என்பதை அவர்கள் ஆழமாகச் சிந்திக்கத் தவறினர். சிவகங்கை மண்ணின் குடிகள் என்ற முறையில் புதிய ஜமீந்தாருக்கு தங்களது ராஜ விசுவாசத்தைத் தெரிவித்துக் கொள்ள அவர்கள் துடித்தனர்.

புதிய அணியின் பேராளர்களாக மாறினர். எத்தகைய சிறந்த இலட்சியத்திற்காகப் போர்க்கோலம் பூண்டு பரங்கியரை எதிர்க்கப் புறப்பட்டு இருக்கிறோம் என்ற பின்னணியைக் கூட அவர்கள் மறந்துவிட்டனர். அவர்கள் புரிந்து கொண்ட அரசியல் அவ்வளவுதான். ஆனால் அக்கினியூவின் திட்டம் அருமையாகச் செயல்பட்டது; நிறைவுபெற்றது. அந்நிய ஏகாதிபத்தியத்தை ஆவேசமாக எதிர்த்த மருதுசேர்வைக்காரர்களால் மிகப் பொறுப்பான பணியில் அமர்த்தப்பட்டிருந்த கோட்டைச் சேர்வைக்காரர் போன்ற நம்பிக்கைக்கு உரிய முக்கிய புள்ளிகள் கூட எதிர் அணியை நோக்கி விரைந்தனர்.[1] கிளர்ச்சிக்காரர்கள் அணி பலவீனமடைந்தது என இங்கு குறிப்பிட வேண்டியதில்லை. தென்னிந்திய வரலாற்றில், எந்தப்போரின் பொழுதும் தாக்குதல் தொடுக்கும் நேரத்தில் காலை வாரிவிடும் கயவர்கள் நிறைந்த அணி, இலட்சியத்திற்காக எப்படித் போராட முடியும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மருது சேர்வைக்காரர்கள் சிறிதும் சங்கடப்படாமல் தெளிவான முடிவிற்கு வந்ததுதான் மிகவும் வியக்கத்தக்க செயலாகும். அவர்கள் முன்னர் இரண்டு வழிகள் துலக்க-


  1. Military Consultations vol. 288(A) (16-0-1801) - p. 6883.