பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அவர்களை இனங்கண்டு தாக்க முடியாமல் தவித்தனர். இந்தக் காரணத்தினால் அவர்களுக்கு தோல்விதான் ஏற்பட்டது. கும்பெனியார் தரப்பில் இங்க்லிஸ் என்ற ராணுவ மருத்துவர் படுகாயமடைந்தார்.[1]

கொல்லங்குடிக்கு வடக்கே உள்ள முத்தூரை இன்னொரு அணி இரவு எட்டு மணிக்கு அடைந்தது. அங்குள்ள ஏந்தல் கண்மாயில் வெள்ளம் போய்க் கொண்டு இருந்தது, இருட்டையும் வெள்ளத்தையும் இரு தரப்பினரும் பொருட்படுத்த வில்லை. சின்ன மருது சேர்வைக்காரரும் அங்கு நடந்த போரில் கலந்து கொண்டார். என்றாலும் ஒரே குழப்பம் நிலவியது. கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் பலனுள்ளதாக இல்லை. அவர்கள் சிதறி ஆங்காங்கு இருட்டில் நின்று தாக்கியதால் அவர்களது இலக்குகள் சரியாக இல்லை. தாக்குதலில் வேகமும் இல்லை. அப்பொழுது சின்ன மருது சேர்வைக்காரருக்கு கிடைத்த தகவல் கூடுதலான குழப்பத்தை ஏற்படுத்தியது. அரண்மனை சிறுவயல் திக்கில் இருந்து பரங்கிப்படையணி ஒன்று காளையார் கோவில் நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பது தான் அந்த தகவல். எந்த அணி மீது கவனம் செலுத்துவது என்பது அப்பொழுது சின்ன மருது சேர்வைக்காரது சிந்தனையாக இருந்தது. நொடி நேரத்தில் ஒரு முடிவிற்கு வந்தார். பரங்கியருடனான அந்த தாக்குதலை நிறுத்தி விட்டு, முழுவதும் ஆயத்த நிலையில் உள்ள காளையார் கோவில் எதிரியைச் சந்திப்பது என்ற முடிவுடன் இருட்டை ஊடுருவிக் கொண்டு காளையார் கோவில் கோட்டை நோக்கி குதிரையில் பாய்ந்து மறைந்தார்.[2]


  1. Ibid p. 6869.
  2. Military Consultations vol. 288 (A)-(1-10-1801) p. 6869