பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

ஆயத்தமாக நின்ற போர்மறவர்கள் பரங்கிகளைப் பார்த்தவுடன் வெஞ்சினம் கொண்டு ஆர்ப்பரித்தனர். போர் முழக்கங்களை எழுப்பினர். சரமாரியாக அவர்கள் விட்டெறிந்த ஈட்டிகளையும் வெடித்த துப்பாக்கி குண்டுகளையும் புறக்கணித்துவிட்டு, கோட்டையைத் தாக்குவதற்கான கட்டளைக்கு கும்பெனிப்படைகள் காத்து நின்றன. அவர்களது அணிவகுப்பில் முதன்மையாக குதிரையில் அமர்ந்து இருந்த தளபதி, அக்கினியூ சிவப்புக்கொடியை அசைத்து சைகை செய்தவுடன் பீரங்கி அணியின் பேய்வாய்கள் அக்கினியை உமிழ்ந்தன. குதிரைப்படைகள் தாவிச் சென்று தாக்கின. அவர்களைத் தொடர்ந்து தூசுப்படைகள், கார்கால மேகங்களில் இடி மின்னலைப் போன்று பீரங்கிகள் கக்கிய அக்கினி மழையில் காளையார்கோவில் கோட்டை நனைந்து கொண்டு இருந்தது. அதுவரை அத்தகைய கடுமையான தாக்குதலை சந்திக்காத கோட்டையின் மதில்கள் சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருந்தன.

கோட்டை கொத்தளங்களில் இருந்த கிளர்ச்சிக்காரர்களும் ஆக்கிரோசத்துடன் பதிலுக்கு துப்பாக்கிகளினால் சுட்டனர். பீரங்கிகளை சுட்டு வெடித்தனர். வளரித் தண்டுகளை குறி பார்த்து வீசினர். கவண்களில் கற்களை வைத்து எறிந்தனர். குத்து ஈட்டிகளைத் தொடர்ச்சியாக எறிந்தனர். சூரியனது வெப்பத்தை விட பலமடங்கு சூட்டுடன் கொதித்துக் கொண்டிருந்த கொதிகலன்களில் இருந்து ஈயத்தண்ணீரை வாரி இறைத்து பரங்கிப் படையினரை நாசமடையச் செய்தனர். ஆனால் இவையனைத்தும் அவர்களது முன்னேற்றத்தினை கணிசமான நேரத்திற்கு தடுத்து நிறுத்தின. என்றாலும், பரங்கிகள் தங்களது தாக்குதலைக் கைவிடவில்லை. அவர்களில் பலர், தங்களது முதுகில் இணைத்துப் பிணைத்து இருந்த நூலேணிகளைக் கொண்டு கோட்டை மதிலில் உடும்புப் போல ஊர்ந்து ஏற முயன்றனர். அவர்களது முயற்சிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கிகள் படபடத்தன. மதில் மேல் இருந்து மறவர்கள் கீழ்நோக்கி எதிரிகளைச் சுட்டு வீழ்த்தினர், கருமருந்து கொட்டான்களிலும் சட்டிகளிலும் தீயிட்டு அவர்கள் மீது விட்டெறிந்தனர். பதினெட்டு அடி உயரமுள்ள கோட்டை மதில் பரங்கியரின் பீரங்கி தாக்குதலால் திணறியது. சிவகங்கைச் சீமைப் போராளிகளும் அந்த அசுரத்தாக்குதலினால் தளர்ந்தனர்.