பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

கோட்டை வாசலை நெருங்கி அங்குள்ள காவல் அரணை அழித்து, கோட்டைக்குள் புகுவதற்கு முயன்ற பரங்கியர் அணிகளுடன், சிவகங்கை போராளிகள் நேருக்கு நேர் பொருதினர். அவர்கள் பற்றி இருந்த நெடுவேலும், கொடுவாளும், வளரிகளும் அந்த மண்ணுக்கே உரிய வீரத்துடன் விளையாடின. எதிரிகளின் தலைகளை வரிந்து கொய்தும் அவர்களது கொடிய இதயங்களைக் குத்தி பிளந்தும் மகிழ்ந்தனர். புற்றீசலைப் போன்று அணி அணியாக, அலை அலையாகப் பொருத வரும் பாங்கிகள் - உருவும் நெருப்புக் கோளங்களை உமிழ்கின்ற பீரங்கிகளின் உறுதியான தாக்குதல் - இவைகளுக்கிடையே நின்று போராடும் இரும்பு நெஞ்சங்கள் இறுதியில் மறவர்களது விலை மதிக்க முடியாத வீரம் அங்கு விலைபோகவில்லை. போராளிகள் அனைவரும் புகழைப் புகலிடமாகப் பெற்றுள்ள வீர மரணத்தை தழுவினர். “நின்று புகழொழிய நில்லா உயிரோம்பி இன்று நாம் வைகல் இழிவாகும்” என அவர்கள் எண்ணி இருத்தல் வேண்டும். உலையா உள்ளமொரு உயிர்க்கடன் இருத்தோராகத் தங்கள் விழுப்புண்பட்ட உடல்களை மண்ணில் சாய்த்துப் புகழால் உயர்ந்தனர். தந்தையும் தாயும் குலவி மகிழ்ந்த மண், அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண் அல்லவா அந்த மண். அந்தப் புனித மண்ணின் மாண்பைக் காக்கப் போராடி வீழ்ந்த அவர்களது ஏமாற்றத்திற்கு இணையான எடுத்துக்காட்டு எங்கும் காண இயலாத ஒன்று. புறநானூற்றுப் போர்க்களங்களை நினை ஆட்டும் அவர்களது போர்ப்பரணி மெதுவாக ஓய்ந்தது. அம்பு பட்டு அடியோடு சாய்ந்த யானைகள் தோற்றத்திலும் ஏற்றத்திலும் சிறந்த வகைக் குதிரைகளும் மாய்ந்தன. அவைகளில் ஏறி வந்து போரிட்ட மறவர்களும் மடிந்தனர். அத்துடன் அனைத்து வீரர்களும் மாண்டனர். போர் முரசைத் தொடர்ந்து முழக்குவதற்குக் கூட ஆள் இல்லை......... பெரும் புலவர் பாணர் வடித்துள்ள புறப்பாடலின்[1] மறு காட்சியாக அமைந்திருந்தது. காளையார் கோட்டை போர்க்களம், கிளர்ச்சிக்காரர்களது இலட்சிய அரணாக, ஏகாதிபத்தியவாதிகளின் இலக்காக விளங்கிய, அந்தக் கோட்டை கண்ட இறுதிப்போர் அது. இந்த உலகத்திலேயே மிகவும் உயர்ந்ததாகவும். அருமையானதாகவும் கருதப்படும் ஆருயிரை பிறந்த மண்ணின் பெருமையைக் காப்ப-


  1. 1 பாணர்- புறப்பாட்டு எண். 63