பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

யும் கிளர்ச்சிக்காரர்களது கட்டுப்பாட்டினின்று நீக்க வேண்டும் என்பது அக்கினியூவின் ஆக்ஞை.

அத்துடன், மேஜர் ஷெப்பர்டை காளையார் கோவில் காடு முடிவடையும் மங்கலம் பகுதிக்கும். லெப்டி, மில்லர் இராமநாதபுரத்திற்கும், கேப்டன் லாவக்கோர்டும், லெப்டி. லாங்பர்டும் பிரான்மலைக்கும், கேப்டன் சுமித் திருப்பத்துாருக்கு வடக்கே உள்ள காட்டிற்கும், மேஜர் மக்காலே பார்த்திபனூர் முடுக்கங்குளம் பகுதிக்கும் விரைவாக அனுப்பப்பட்டனர்.[1] ஏனெனில் கும்பெனியாருக்குக் கிடைத்த துப்புக்களின்படி மீனங்குடி முத்துக் கருப்பத்தேவர் நயினார்கோவில் பகுதியிலும், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை குழுவினர் திருப்பத்துார் காட்டிலும், மருதுசேர்வைக் காரர்கள் வெட்டுர் பெருங்குடி பகுதியிலும் சிவத்த தம்பி, குப்பம் ஊரணிப் பகுதியிலும் அப்பொழுது நடமாடுவதாக தகவல்கள் கிடைத்த மறு வினாடியே கும்பெனி அணிகளும் கூலிப்பட்டாளங்களும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்றன. மருது சேர்வைக்காரர்கள் சருகணியில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி கேப்டன் காட்பிரே சருகணிக்கு விரைந்து சென்றான்; தனது அணியுடன், அந்தக்கிராமம் அமைதியாக இருந்தது. ஆனால் அங்குதானே சின்ன மருது சேர்வைக்காரர் இருந்தார். வீடு வீடாக சோதனை செய்தனர். அப்பொழுது சின்னமருது அங்குள்ள மாதா கோயிலுக்குள் புகுந்து தஞ்சம் தேடினார். கோயிலை அடுத்த வீட்டில் கோவில் பாதிரியார் ஒரு பெரிய பெட்டியின்மீது அமர்ந்தவாறு "பைபிள்" படித்துக் கொண்டு இருந்தார். பதட்டத்துடன் ஓடிவந்த சின்னமருது சேர்வைக் காரரை அவர் இனங்கண்டு கொண்டார். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் "பாஸ்கல்" திருவிழாவின் பொழுது புனித மேரி மாதா ஆரோகணித்துச் செல்ல அலங்காரத்தேர் ஒன்றினை அன்பளிப்பாக சின்னமருது வழங்கி இருந்தார்.

அப்பொழுது அவரது நிலைமையை பாதிரியார் புரிந்து கொண்டார். ஒரு கணம் யோசித்தார். அவர் "உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன், என்னையும் ஏற்றுக் கொள்கிறான்.[2]என்ற


  1. 7.Revenue Sundries, vol. 26 (11-10-1801)(7-10-1801) pp. 333-45
  2. 8. புதிய ஏற்பாடு மத்தேயு சுவிஷேசம் 10:40