பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

வேதவாக்கினை நினைத்தார். உடனே அவர் அமர்ந்து இருந்த பெட்டிக்குள் ஒளிந்து கொள்ளுமாறு சைகை செய்தார். மருது சேர்வைக்காரரும் அவ்விதமே ஒளிந்து கொண்டார். தொடர்ந்து வந்த கும்பெனித்தளபதி அந்தப்பக்கம் ஓடி வந்த மருது சேர்வைக் காரரைப் பற்றிப் பாதிரியாரிடம் விசாரித்தார். தம்முடைய அமைதியான படிப்பைக் குலைத்தற்கு ஆத்திரப்பட்டவர் போல பாதிரியார் "நன்கு உற்றுப் பார்த்துக் கொள்" என்று சினந்து பதிலளித்த பாதிரியாரது வெறுப்பை உணர்ந்தவனாக வெள்ளைத் தளபதி அங்கிருந்து அகன்று விட்டான். சின்னமருது அப்பொழுது தப்புவிக்கப்பட்டார். தமது இக்கட்டான நிலையில் அடைக்கலம் அளித்த பாதிரியாருக்கு நன்றியைத் தெரிவித்ததுடன் அமையாமல், அந்த மாதா கோயிலின் பராமரிப்பிற்காக கிராமம் ஒன்றை அறக்கொடையாக வழங்கியும் செப்பு பட்டயம் ஒன்றினையும் எழுதிக் கொடுத்துச் சென்றார் சின்னமருது.[1]

கும்பெனித்தளபதி, அடுத்து சருகணி கிராமத்தில் சிவகங்கை சேர்வைக்காரரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்த சவரி முத்துப்பிள்ளை என்ற முதியவரையும் அவரது ஆண்மக்களையும் கண்டுபிடித்து கைது செய்து அழைத்துச் சென்றான். இந்த முதியவரை எப்படியும் பிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் அவர்பால் எவ்வித அனுதாபமும் கொள்ளக்கூடாது என்பதும் அக்கினியூவின் கண்டிப்பான உத்திரவு.[2] இந்தக்குடும்பத்தினரை உரளிக்கோட்டை அருகில் தூக்கிலிடப்பட்டு இருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.

வெள்ளைத்தளபதி அக்கினியூ எழுதியபடி அப்பொழுது, சற்று அமைதியாக இருந்து எஞ்சியுள்ள போராளிகளது எண்ணிக்கை, ஆயுத இருப்பு ஆகியவைகளைத் தெரிந்து கொண்ட பிறகு, மேலும் பரங்கிகள் எதிர்ப்புப்போரைத் தொடருவது என்பது அப்பொழுதைக்கு சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் மேற்கொண்டிருந்த முடிவு. ஆனால் அவர்கள் நினைத்தபடி சிறிது நேரம் கூட காட்டில் அமைதியாக இருந்து சிந்திப்பதற்கு பரங்கிகள் அவகாசம் கொடுக்கவில்லை. போதாக்குறைக்கு படபடவென


  1. 9 மாறணி செப்பேடு (எருகனி தேவாலயத்தில் உள்ளது)
  2. 10 Revenue Sundries vol. 26 (11-10-1801) pp. 357-58