பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

கொட்டும் ஐப்பசி மாத அடைமழை. அவர்களை உயிருடன் பிடித்து விடுவதற்காக, அவர்கள் சென்ற பாதைகளின் வழியே. பரங்கிகளும் சென்றனர், வழக்கம்போல சுயநலமிகளான துரோகிகள் அவர்களுக்கு வழிகாட்டி முன் சென்றனர். காடுகளை ஊடுருவி "தேடுதல்" பணியை நடத்தினர். இரத்தவெறி கொண்ட அக்கினியூ இந்தத் திட்டத்தை விரைவாக முடிப்பதற்காக விளம்பரம் ஒன்றை காளையார் கோவிலிலும் சுற்றுப்புறங்களிலும் பொதுமக்களிடம் பரப்பினான், கைக்கூலி பெறும் ஆசையில் கண்னைப் பொத்திக் கொண்டு மக்கள் தலைவர்களைக் காட்டிக் கொடுக்கும் கழிசடைகளுக்குக் கண்ணி வைத்து காத்து இருந்தான்.

வெள்ளைமருது, சின்னமருது, சிவத்தையா ஆகிய தலைவர்களைப் பிடித்துக் கொடுப்பவருக்கு தலைக்கு ஆயிரத்து ஐநூறு குளிச்சக்கரம், என்றும் ஏனைய முன்னணி வீரர்களான சிவஞானம், துரைச்சாமி, முத்துச்சாமி, கறுத்தத்தம்பி - உடையணன், மோலிக் குட்டித்தம்பி, வேங்கன் பெரிய உடையாத்தேவர், ஊமை குமாரசாமி ஆகியவர்களைப் பிடித்து வருபவர்களுக்கு தலைக்கு ஆயிரம் குளிச்சக்கரம் பணம் வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் கண்டிருந்தது.[1]கும்பெனியாரது ராணுவபலத்திலும் வெற்றியிலும் நம்பிக்கை கொண்டு இருந்த கைக்கூலிகளுக்கு இந்த அறிவிப்பு நல்லதொரு ஊக்குவிப்பாக அமைந்து இருந்தது. ஓடுபவர்களைக் கண்டால் துரத்துகிறவர்களுக்கு எளிதுதானே!

வாழ்வில் மட்டுமல்லாமல், தாழ்விலும் பங்குகொண்டு பின் தொடர்ந்த தோழர்கள், உறவினர்கள் ஆகியோருடன் மருது சகோதரர்கள் காட்டில் தங்கி இருந்த மறைவிடத்தை மோப்பம் பிடித்துத் திரிந்தன. அந்தமனித ஓநாய்கள், தோல்வியால் தளர்ந்து துயரத்தில் துவண்ட அவர்களை, ஒருவர் பின் ஒருவராகக் கைப் பற்றினர். ஆங்காங்கு, அவர்களைத் தூக்கில் தொங்கவிட்டு மகிழ்ச்சியடைந்ததை அக்கினியூவின் பல அறிக்கைகளில் காணப்படுகின்றன. இறுதியில் மருது சேர்வைக்காரர்களது மறைவிடத்தையும் அக்கினியூவின் அடிமைகள் கண்டுபிடித்தனர். காட்டின் ஒரு இடத்தில் படிந்து இருந்த ஒட்டகை, குதிரைகளது கால்குளம்-


  1. 11. Revenue Sundries, vol. 26, (17-10-18-1). Proclamations