பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

அலசினான். காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள கருணை என்ற கிராமத்திற்குப் போய்ச் சேர்ந்தான், சங்கரப்பதி, செங்கோட்டை காடுகளைப் பிரிக்கும் மையப்பகுதியில் உள்ளது அந்த ஊர். அங்கிருந்து ஒரு கல் தொலைவிற்கு மேற்குத்திக்கில் நெருக்கமாக நீண்டு சென்றது அந்தக்காடு. அந்தப்பகுதியில் - அரண்மனை சிறுவயலுக்கும் காருகுடிக்கும் இடைப்பட்ட பகுதியில், பல இடங்களில் கிளர்ச்சிக்காரர்கள் பதுக்கி வைத்து இருந்த கருமருந்து மற்றும் ஆயுத இருப்புகளைக் கைப்பற்றினர். இன்னும் அந்தப் பகுதியில் ஊடுருவி வருகின்ற கும்பெனியாரைப்பற்றி நோட்டமிட்டு அவர்களது நடமாட்டத்தை அறிந்து தெரிவிப்பதற்காக சிவகங்கை சேர்வைக்காரர் நியமித்து இருத்த மணவாள நாயக்கர் என்ற ஒற்றரையும் அவரது மகன் உள்ளிட்ட எட்டுப் பேரையும் 5-10-1801யன்று கைது செய்து காவலில் இட்டனர். இதனால் மருது சேர்வைக்காரர்களுக்கும் சங்கரப்பதி காட்டின் வடகிழக்குப் பகுதிக்கும் இருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.[1]

அடுத்த இரு நாட்களில், அந்தக் காட்டுப்பகுதியில் தங்கி இருந்த வெள்ளைமருது சேர்வைக்காரரது பெண்டுகள் பிள்ளைகள் சிலரையும் கூலிப்பட்டாளம் வளைத்துப் பிடித்தது. சங்கரப்பதி, செங்கோட்டை, சிறுகுடிப்பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வந்த தளபதி பிளாக்பர்ன், வடக்கே கீரனுர் சென்று கர்னல் அக்கினியூவைச் சந்தித்து மேல் நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினான். [2] திருப்பத்துர் பகுதியில் பாஞ்சாலங்குறிச்சி ஆட்கள் விருப்பாட்சி பாளையக்காரர் தலைமையில் நடமாடுவதை நோட்டமிட்டனர். அப்பொழுது சின்னமருதுவின் மகன் சிவத்த தம்பியும் அவரது மகன் முத்துச்சாமியையும், காடல்குடி பாளையக்காரர் கிர்த்தி வீரகுஞ்சு நாயக்கரையும் அவர்களது பெண்டு பிள்ளைகளையும் பிடித்தனர். இந்த முன்னணித் தலைவர்கள் மூவரையும் கண்டிராமாணிக்கம் என்ற சிற்றுாரில் பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட்டனர்.[3]அவர்களைப் பிடிப்பதற்காகக் கும்பெனியாரது கைக்கூலியைப் பெற்ற துரோகிகள் மகிழ்ச்சியினால் கும்மாளம் போட்டனர்.


  1. 16 Military Consultations vol. 288, (A) (7-10-1801) p. 6971-72.
  2. 17. Ibid p. 6892-95.
  3. 18 . Ibid p. 6895.