பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

போராட்ட உணர்வுடன் திகழ்ந்த முன்னணி வீரர்கள் அனைவரும் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். அல்லது ஆங்காங்கு தூக்கு மரங்களில் தொங்கவிடப்பட்டனர். இப்பொழுது மறவர் சீமையில் பகல் கொள்ளை நடத்த பரங்கிகளுக்கு எவ்வித தடை இடை இல்லை. மறவர் சீமை, திண்டுக்கல் சீமைகளிலும், சோழ சீமையின் தென்பகுதிகளிலும் காட்டுத் தீ போல வளர்ந்து பரவிய மக்களது ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சி, வரலாற்றில் மூன்றாவது முறையாக. ஏன் முற்றாகவே தோல்வி அடைந்தது. வேதனையையும் பேரழிவையும் எய்திய மக்கள், இருளடைந்த எதிர்காலத்தை எதிர்நோக்கி ஏக்கத்துடன் இருந்தனர். அவர்களது தளர்ந்த கண்களில் நம்பிக்கை ஒளி தட்டுப்படவில்லை.