பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166


காளையார் கோவில் முந்தைய போரில் பரங்கியர் சிவகங்கை மன்னர் முத்து ரெகுநாத பெரிய உடையாத் தேவரைக் கொன்றனர். இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி முடியாட்சியைப் பறித்து இருபத்து மூன்று ஆண்டுகள் வெங்கொடுமைச் சிறையில் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கும் படி செய்து அவரைச் சாகடித்தனர்.

சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர், சேதுபதி மன்னரை சிறையில் இருந்து மீட்பதற்காக கி.பி. 1799-1800-1801 ஆகிய ஆண்டுகளில், மறவர் சீமையைக் குலுக்கிய மக்கள் கிளர்ச்சிகளை முடுக்கிவிட்டுப் பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி, தோல்வியுற்று, கும்பெனியரது கண்களில் படாமல் தலைமறைவு வாழ்க்கையில் தலைகுனிந்து வாழும்படி செய்தனர்.

நாட்டு விடுதலை யொன்றையே நினைவும் கனவுமாகக் கொண்டிருந்த சிங்கன் செட்டி, பொட்டூர், முத்துக்கருப்ப பிள்ளை, திருக்கண்ணத்தேவர், கனக சபாபதித் தேவர், ஜகன்னாத அய்யன், குமாரதேவன் போன்ற மறவர் சீமை மாணிக்கங்களை, சித்திரவதை செய்து, கொதிக்கும் நீரில் கோழிக்குஞ்சுகளை அமுக்கிக் கொல்வது போல, பரங்கிகள், மரணக்குழிக்குள் தள்ளிவிட்டு மூடினர்.

அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எதற்காக நிகழ்ந்தன? ஏன் நிகழ்த்தப் பட்டன? பரங்கிகளின் இந்த பாதகச் செயல்களின் பின்னணி என்ன?

தருமம் தழைக்க, தங்களது மண்ணில் அதருமர்களான ஏகாதிபத்திய நாய்கள் அட்டகாசம் செய்யக் கூடாது மக்களது நலன்களைப் பாதுகாக்கும் மன்னர்களது தன்னரசுகள் தழைத்து ஓங்கவேண்டும்; மக்களது வயிற்றுப் பசி தணிக்கப்படுவது போல, அவர்களது அறிவுப்பணியினால் பரிமளிக்கின்ற சிந்தனைகள் சமய, சமுதாய மரபுகளை வளர்க்கப் பயன் படவேண்டும் என்பது தான் அன்றைய குடிமக்கள் கொண்டு இருந்த எண்ணங்கள். ஆனால், இத்தகைய இயல்பான எண்ணங்களுக்கு இடையூறுகள் எழுந்தன. அவைகளை அன்னிய சக்திகள் உருவாக்கி ஊக்குவித்தன. அவைகளின் பின்னே ஏகாதிபத்திய வெறியும் அடிமை உணர்வும் அடங்கி விழுந்தன. அப்பொழுது குடிமக்கள் ஆவேசங்கொண்டு கிளர்ந்து எழுந்தனர். புதிய ஆட்சி என்ற முகமூடிக்குள் பதுங்கிக்