பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தியாகமும், ஒளிவிளக்காக உதவின. அதனால் மக்களது ஒன்றுபட்ட ஆதரவுடன், மகத்தான மாபாரதப் போரைத் தொடுத்தனர். அதுவரை விசுவாசமாக நடந்து கொண்ட பணியாளர்கள், போராடிய வீரர்கள், நலிவுதீர உதவிய நண்பர்கள், உறவினர்கள் - ஆகிய பல திறத்தவர்களின் பெரும்பகுதியினர் செஞ்சோற்றுக் கடனையாவது கழிக்க வேண்டும் என்ற நெஞ்சுறுதி இல்லாமல் கட்சி மாறி ஓட்டம் பிடித்தனர்; காட்டிக் கொடுத்தனர். காலைவாரி விட்டனர். விடுதலைப் போரின் வேகத்தை திசை திருப்பினர். மறவர்சீமையின் மானங்காத்த தியாகிகளது புனிதப் பதாகையில் மாசு சேர்த்தனர். முடிவு யாரும் எளிதில் ஊகித்து அறியும் ஒன்று தான.

மாற்றானுக்கு எதிராக மகாமேரு போல திரண்டு நின்ற கிளர்ச்சிக்காரர் அணி சிற்றெறும்புக் கூட்டமாக சிறுத்துக் குறுகியது. அதனால், பல நாட்கள் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட காளையார்கோவில் கோட்டைப்போர் ஒரே நாளில் முடிந்தது. மங்கலம், சங்கரப்பதி, செங்கோட்டை, சிறுவயல், காடுகளில் எத்தனை நாட்களுக்கு அலைந்து வாழ முடியும். காளையார் கோவில் கோட்டை வீழ்ந்த இருபது நாட்களுக்குள் கிளர்ச்சிக்காரர்களது அணி முழுமையாகப் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது. பிறந்த மண்ணைக் காக்கப் போராடிய அவர்களுக்கு பரங்கியர் அளித்த பரிசு - மரண தண்டனை. கொள்ளைக்காரர்களையும் கொடியவர்களையும் கொல்வது போல போராளிகள் அனைவரையும் ஆங்காங்கு தூக்கில் தொங்கவிட்டுக் கொன்றனர். ஆனால் அந்த தண்டனை வழங்கியதில் பரங்கியர் யாருக்கும் பாரபட்சமாக நடந்து கொள்ளவில்லை!

குளத்துர் பாளையக்காரர் கீர்த்த வீர குஞ்சுநாயக்கருக்கும் மரணதண்டனை. மீனங்குடி கனக சபாபதி தேவருக்கும் மரண தண்டனை. ஏன்? மருது சேர்வைக்காரர்களுக்கும் மரண தண்டனை சீறி வரும் சினவேங்கையின் வாலைப்பிடித்துத் தூக்கி, தரையில் அடித்துக்கொல்லும் துணிவும் ஆற்றலுமிக்க வெள்ளைமருது சேர்வைக்காரருக்கும் மரணதண்டனை.

உள்ளங்கை அளவு கனமான ஆர்க்காட்டு நவாப் வெள்ளிப் பணத்தை தனது விரல் இடுக்கில் வைத்து நொடித்து ஒடித்து