பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

றானாகிய கும்பெனியாரின் பாசத்தையும் பிணைப்பையும் பெரிதாக மதித்து வந்தனர். இந்தநிலை சிவகங்கைச்சீமை அரசியலுக்கு முற்றிலும் வேறுபட்டதும் மக்கள் நலனுக்கு முரண்பட்டதுமாகும் என்பதை அவர்கள் உணரத் தவறி விட்டனர். இதனை அவர்களுக்கு உணர்த்தும் திறன் படைத்த பெரியவர்களும் அப்பொழுது அவரது பணியில் இல்லை.

அவர்களுக்கு முன்னால், சிவகங்கைச்சீமை பிரதானியாக தாண்வடராய பிள்ளை, சிவகங்கை, இராமநாதபுரத்தின் சீதனச் சொத்து என்ற தொன்மை உறவுடன், இராமநாதபுரம் பிரதானிகள் தாமோதரன்பிள்ளை, பிச்சைப்பிள்ளை, ஆகியோரின் கருத்துக்களை அனுசரித்து அரசியல் பணிகளை அன்னியோன்னிய பிடிப்புகளுடன் ஆற்றிவந்தார். அதே வழித்தடத்தில் மருது சகோதரர்களும் தங்கள் பிரதானி பணியினைத் தொடர்ந்து இருந்தால், மறவர் சீமையிலும் அவர்களுக்கு மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்டு இருக்கும். இன அடிப்படையிலும், மறக்குடி மக்களது ஒன்று பட்ட வலிமையை - ஒற்றுமையை - உருவாக்கி வரலாறு படைத்து இருக்க முடியும். அத்தகையதொரு மகத்தான மக்கள் சக்தி முன்னர் எந்த ஆதிக்கவாதியும் ஆதாயம் பெற முடியாது. ஆக்கிரமிப்பாளர் யாரும் எப்பொழுதும் இந்தச்சீமைகளுக்குள் ஊடுருவி இருக்க முடியாது.

வரலாற்று வரிகளைச் சற்று பின்னோக்கிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். பாண்டியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு மதுரைப் பேரரசர்களாக இருந்த சொக்கநாத நாயக்கரும், திருமலை நாயக்கரும்.ராணி மங்கம்மாளும் மறவர் சீமை மீது பல படையெடுப்புகளை நடத்தியும் பேரிழப்புகளைத் தான் பெற்றனர். மகத்தான படைவலிமை பெற்று இருந்த மறவர்சீமை மண்ணில் ஒரு அடி நிலத்தைக்கூட தங்கள் காலடிக்குள் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அதற்குமாறாக நாயக்க அரசிற்கு ஏற்படவிருந்த அவமானம், பேரழிவு ஆகியவைகளில் இருந்து இராமநாதபுரம் திருமலை ரகுநாத சேதுபதியும், ரகுநாத கிழவன் சேதுபதியும் மதுரை நாயக்க மன்னர்களைக் காப்பாற்றி பேரும், புகழும் பெற்றனர். தமிழகத்தின் தலைநகரான மதுரையின் வாழ்வுகுலைந்து மாநகர் மாற்றானின் சொத்தாக மாறிவிட்டால், மறவர் சீமையின் மாண்பும் மறைந்துவிடும் என சேதுபதிகளது சிந்தனையில் பட்டது. மறவர் சீமைக்கு திருமலைநாயக்கரும்