பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

ராணி மங்கம்மாளும் இழைத்த தீமைகளை மறந்து, மன்னித்து, மதுரையை மீட்டனர். மீண்டும் மற்றுமொரு மைசூர்படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து கி.பி.1752ல் மதுரையைக்காத்து எங்கோ முடங்கிக் கிடந்த மதுரை நாயக்க மன்னரின் வாரிசான விஜய குமார பங்காரு திருமலையை மதுரை மன்னராக முடிசூட்டி மகிழ்ந்தனர்.

அடுத்து, மதுரைச்சீமையில் குறுகிய கால அதிபதிகளாக இருந்த சந்தாசாகிபும், கம்மந்தான் கான்சாகிபும், முராரிராவும் இராமநாதபுரம், சிவகங்கை மன்னர்களை மதித்து நடக்கும் அரசியலைத் தெரிந்து இருந்தனர். கருநாடாகப் பகுதி முழுவதற்கும் நவாப்பாக இருந்த வாலாஜா முகம்மது அலிகான் இந்த இரண்டு சீமைகளின் மீது இருபத்து ஒரு ஆண்டு கழித்தே ஆக்கிரமிப்பைத் துவக்கினார். இந்த ஆதார நிலையினை, அனுபவமும் துணுக்கமான அரசியல் நோக்கும் இல்லாத மருது சேர்வைக்காரர்கள் புரிந்து கொள்ளத் தவறியதால் கடந்த பத்து ஆண்டுகளாக, இந்த இரு சிமைகளுக்கும் இடர்ப்பாடும் தாழ்வும் தொடர்ந்து வந்தன.

மறவர் சீமை நிலை இப்படியென்றால், இதைவிட மோசமான அரசியல் சூழ்நிலை தமிழகமெங்கும் அப்பொழுது வியாபித்து இருந்தது. பரங்கியரின் வெடி மருந்து ஆற்றல், மன்னர் பரம்பரையினரையும் அவர்களது ஆட்சி வரம்பிற்குட்பட்டு அவர்களது பாதுகாப்பு வளையமாக விளங்கிய பாளையக்காரர்களையும் அழித்து ஒழித்ததால், பரங்கியருக்கு எதிரான அரசு அமைப்பு எதுவும் இல்லாத நிலை. அரசியல் ரீதியாக கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக தமிழகத்தில் அரசியல் ஆதிபத்தியம் கோரி வந்தவரும், பரங்கியரின் பேராசைக்கு - ஆதிக்க வளர்ச்சிக்கு ஆணிவேராக அமைந்து இருந்தவருமான ஆர்க்காட்டு நவாப்பும் அரசியல் சன்னியாசம் பெற்றுவிட்டார். இத்தகைய நிராதரவான சூழ்நிலையில் அவர்களை எதிர்த்து நின்ற சிவகங்கை சேர்வைக்காரர்களையும் அவரது தலைமையிலான கிளர்ச்சிக்காரர்களையும் பரங்கிகள் ஒரே இலக்காகக் கொண்டு, தங்களது அரசியல் சாகசங்கள், ஆற்றல் அனைத்தையும் ஈடுபடுத்தி அழித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

வாரணம் பொருதும் மார்பும், வரை நிகர்த்த தோளும், வாய்க்கப்பெற்று இலங்கேசுவரனைப் போல, வீரத்திருவாக, மறப், பண்புகளுக்கு விளக்கமாக, மான உணர்வுகளுக்கு இலக்கணமாக,