பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

விளங்கிய மருது சேர்வைக்காரர்களுக்கு மரணச் சீட்டுயெழுத அக்கினியூ முடிவு செய்தான். ஆம்! எத்தனை நாட்களுக்குத்தான் இரும்புச் சங்கிலியில் பிணைத்து இரவு பகலாக எச்சரிக்கையுடன் அவர்களை ஒக்கூர் ராணுவ முகாமில் பாதுகாத்து வைத்திருப்பது? அதுவரை பிடிபட்ட கிளர்ச்சிக்காரர்கள் அனைவரையும் அவர்கள் போராட்டம் நடத்திய அல்லது பிடிக்கப்பட்ட ஊர். பொது இடம், அல்லது கோட்டை வாசலில் தூக்கிலிட்டு வேடிக்கை பார்ப்பதும் அத்துடன் குடிமக்களை அந்தக்கொடூரக் காட்சியைக் கண்டு குலை நடுக்கம் கொள்ளச்செய்வதும் அக்கினியூவின் பொழுது போக்காக இருந்தது. ஆனால் சிவகங்கை சேர்வைக்காரர்களை அவர்கள் வாழ்ந்த அரண்மனை சிறுவயலிலோ, ஆட்சி செய்த சிவகங்கையிலோ அல்லது அவர்கள் இறுதியாகப்போரிட்ட காளையார்கோவில் கோட்டையிலோ அல்லது சிறைபடுத்தப்பட்டுள்ள ஒக்கூர் பாசறையிலோ வைத்து தூக்கி விடாமல், திருப்பத்துார் கோட்டையில் தூக்கிலிட முடிவு செய்தான் அக்கியூ. இந்தக் கோட்டையைத் தேர்வு செய்வதற்காக சிறப்பான காரணம் எதுவும் அவர்களது ஆவணங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சிவகங்கைச் சீமையின் செல்வாக்கு மிகுந்த இந்தத் தலைவர்களைத் தூக்கில் இடுவதை அவர்களது ஆதரவாளர்களும் உற்றார் உறவினர்களும் காணப்பெறும் வாய்ப்பு அந்த இடங்களில் ஏற்பட்டால் சினமும் சிற்றமும் கொண்டு, நனவெல்லாம் உணர்வாகி நரம்பெல்லாம் இரும்பாகி எழுச்சி கொண்டால்."அந்த இழிவினை இடறுவேன் என்னுடல் மேல் உருள்கின்ற பகைக்குன்றை நான் ஒருவனே உதிர்ப்பேன்" - எனப்புறப்பட்டு விட்டால் - இத்தகைய அச்சமும் குழப்பமும் அக்கினியூவிற்கு இருந்து இருக்க வேண்டும். இந்த ஒரே காரணத்தினால்தான். போரினால் பாழ்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பும், நடமாட்டமும் இல்லாத சிவகங்கைச்சீமையின் வடகோடியில் உள்ள திருப்பத்துார் கோட்டையின் மேற்கு அலங்கத்தை மருது சேர்வைக்காரர்களை மரணத்தலமாக அவன் தேர்வு செய்து இருக்கவேண்டும்!

இதில் வேடிக்கையான பகுதி என்னவென்றால், சென்னையில் உள்ள கும்பெனி கவர்னர், சிவகங்கைச்சீமை கிளர்ச்சிக்காரர்களை அடக்குவதற்குப் பணிக்கப்பட்ட கர்னல் அக்கினியூவிற்கு கிளர்சிக்காரர்களைப் பற்றிய அறிவுரை அடங்கிய கடிதம் ஒன்றை