பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

அனுப்பி இருந்தார்2. அதில் "... ... இதுவரை பிடிக்கப்பட்டுள்ள முக்கியமான கிளர்ச்சிக்காரர்களான வெள்ளைமருது. சின்னமருது, ஊமைத்துரை ஆகியவர்களையும், இன்னும் பிடிக்கப்பட வேண்டியவர்களையும், உடனே விசாரணைக்கு கொண்டு வந்து அவர்களுக்கு கிளர்ச்சியில் உள்ள பங்கு பெற்ற உதவிகள் ஆகியவைகளை இனங்கண்டபிறகு, தக்க தண்டனை வழங்க வேண்டும் ... ... ... எனத்தெளிவாகக் கவர்னர் குறிப்பிட்டு இருந்தார்.

கெட்டிபொம்மு நாயக்கரை. 16-10-1799 ல் கயத்தாறில் தூக்கிலிடுவதற்கு முன்னர் கூட இத்தகைய விசாரணை நாடகம் நடத்தப்பட்டது. 3ஆனால் சில சிவகங்கைச் சேர்வைக்காரர்களையும் அவர்களைச் சார்ந்து நின்ற போராளிகளையும் பொறுத்த வரையில் அந்த கண் துடைப்பு நாடகம் நடத்துவது கூட காலத்தை வீணாக்குவதாகும் என கர்னல் அக்கினியூ முடிவு செய்து இருக்க வேண்டும். மேலும், போராளிகளைத் தண்டிப்பதற்குரிய சர்வவல்லமை படைத்த நீதிதேவன் அவன் ஒருவன்தான் என அவன் நம்பி இருக்க வேண்டும். அத்துடன் மருதுசேர்வைக்காரர் கும்பெனியாரின் பலத்த பாதுகாவலுக்குட்பட்ட கைதிகளாக இருந்தாலும் அவர்கள் இந்தப் பூவுலகில் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கின்ற ஒவ்வொரு வினாடியும் பரங்கியருக்கு ஆபத்து என்பதை அக்கினியூ உணர்ந்து இருக்க வேண்டும். அதற்காக நியாயங்கள் சூழ்நிலைகளை முற்றுமாக அவன் புரிந்தும் இருக்கவேண்டும் இல்லையெனில் தலைமை இடத்து உத்திரவையும் புறக்கணித்துத் தன்னிச்சையாகச் செயல்பட்டிருக்க வேண்டியது இல்லையல்லவா? கும்பெனியாரது நலன்களுக்கு ஏற்றதான தனது எந்த முடிவையும் செயலையும் கும்பெனி மேலிடம் ஒருபொழுதும் எதிர்க்காது என்ற இறுமாப்பும் அவனுக்கு இருந்திருக்கவேண்டும்! கும்பெனியாரின் பேராற்றலையும் நிருவாக அரசியல் அமைப்பையும், கடந்த ஓராண்டுக்காலமாக மறவர் சீமையின் பல பகுதிகளில் பொருதி நடுநடுங்கச் செய்த மருது சேர்வைக்காரர்களைத் தூக்கில் தொங்கவிட்டு, அவர்களது உயிரற்ற உடல்கள் ஆடி, அசைவதைப் பார்க்க வேண்டும் என்ற அற்பத்தனமான மிருக ஆசையும் அவனுக்கு இருந்து இருக்கவேண்டும்.


2 .Revenue Sundries vol 26, (28-10-1901) p. 472.

3. குரு - குகதாஸ் பிள்ளை - திருநெல்வேலி சீமை சரித்திரம் (1932)