பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

சிறையில் அடைத்து வைக்குமாறும் உத்தரவிட்டு இருக்கிறேன். மற்றும் தஞ்சைச் சீமையில் கிளர்ச்சிகளை முடுக்கிவிட்டு கொள்ளைகள் நடத்தி, கிராமங்களைத் தீயிட்டு அழித்து குறையாடிய சாக்கோட்டை வீரப்பன் மரணதண்டனை பெறுவதற்கு ஏற்றவன். ஆனால் 2-10-1801ம் தேதிய பொது விளம்பரத்தில் அறிவித்தவாறு, பதினைந்து நாட்களுக்குள் சரணடைந்து விட்டதால், அவனை சாக்கோட்டையிலும், அறந்தாங்கி கச்சேரி முன்பும். நிறுத்தி வைத்து ஐநூறு கசையடி கொடுக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறேன். அவனது சொத்துக்களையும் பறிமுதல் செய்தும், சிவகங்கை ஜமீன்தாரது உபயோகத்திற்கு உட்படுத்தி இருக்கிறேன் எனத் தெரிவித்து இருந்தான்.5

இவ்வளவு கொடுந்தண்டனைகளை விடுதலைப்போராளிகளுக்குப் பரிசாக வழங்கிய அக்கினியூ இந்த அறிக்கைகளில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டு இருந்தான். இராமநாதபுரம், சிவகங்கை, நெல்லைச்சீமையில் உள்ள அனைத்து மக்களையும் நிராயுதபாணிகளாகச் செய்வது எவ்வித - ஆயுதமும் அவர்களிடம் இல்லாமல் பார்த்துக் கொள்வது - அதாவது கிளர்ச்சிக்காரர்கள் முழுமையாக அடக்கப்பட்டுவிட்டதால் காலதாமதம் செய்யாமல் குடிகளிடம் எஞ்சியுள்ள அனைத்து ஆயுதங்களையும் பறித்துவிடுதல் வேண்டும் என்றும் இதற்காக ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் இராணுவத்தைப் பயன்படுத்துவதும் தேவையான தொன்று எனவும் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தான்.6

இந்தக்கடிதத்தை, கொலைகாரன் அக்கினியூ எழுதி முடித்த நேரத்தில் சிவகங்கைச்சீமை சிங்கங்களான வெள்ளைமருது, சின்னமருதுவின் உயிரற்ற உடல்கள் தூக்குமரங்களில் தன்னந் தனியாக தொங்கிக் கொண்டு இருந்தன. ஏகாதிபத்திய வெறி பிடித்த வெள்ளையர்களை சிவகங்கை மண்ணில் இருந்து, ஏன் தமிழ்நாட்டில் இருந்தே அழித்து ஒழிக்க வேண்டும் என்ற அறைகூவலை குடிமக்களிடமும் திருநெல்வேலி, மதுரை திண்டுக்கல் சீமை பாளையக்காரர்களிடமும் முழங்கி வந்த அவர்களது விடுதலை முழக்கம் கேட்கக் கூடாது என்பதற்காக, கொலைகாரர்கள்


5 Ibid. p. 7754-56

6 Military Consultations, vol. 289, (24-10-1801). p. 7676–77,