பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

இட்ட இறுக்கமான சுருக்குக் கயிறு அவர்களது குரல்வளையை அழுத்தி நெருக்கிக் கொண்டு இருந்தது. இனியும் அவர்களது சிம்மக்குரல் கேட்காது. ஆனால், ஏற்கனவே அவர்கள் எழுப்பிய ஆவேசக்குரல் எங்கெல்லாமோ கேட்டுக் கொண்டு இருந்தது. வெள்ளைப் பரங்கிகளை எதிர்க்கும் போராட்டக் குளவையாகி ஒலித்தது.

திண்டுக்கல், பழனி, விருபாட்சி. சத்திரப்பட்டி ஆகிய ஊர்களில் தொடர்ந்து கிளர்ச்சிகள் வெடித்தன. தங்களது ஆயுத வலிமை, குள்ள நரித்தந்திரம், துரோகம் ஆகியவைகளைத் துணைக் கொண்டு கும்பெனியார் நூற்றுக்கணக்கான வீரர்களைத் தியாகிகளாக்கினர். அவர்களுக்கு மருது சேர்வைக்காரர்கள் ஊட்டிய போதம் - ஏகாதிபத்திய எதிர்ப்பு, தன்மானம், தன்னரசு நிலை என்ற இலக்குகளை நோக்கி மக்கள் மேலும் மேலும் வீறு கொண்டனர். வெள்ளையரின் ஆயுதவலிமை வெல்ல முடியாதது அல்ல என்ற வீர உணர்வை ஊட்டிய சிவகங்கைச் சேர்வைக்காரர்களது போராட்டப் பாதையைப் பின்பற்றி, வெற்றி தோல்வியை நினையாமல் ஏகாதிபத்திய எதிர்ப்பை இலக்காக கொண்டு அந்த வீரர்கள் நடைபோட்டனர்.

தெற்கே தமிழகத்தில் இவ்விதம் தொடங்கிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்தான் காலம் செல்லச் செல்ல இந்திய விடுதலைப் போராக வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதிகளில் பரவியது. அவை தொடங்கப் பெற்ற காலமும் இடமும் கருவும் வேறுபடலாம். அவை அனைத்தின் பின்னணி ஒன்றே ஒன்றுதான். ஆதவன் அஸ்தமிக்காத வெள்ளை ஏகாதிபத்தியப் பேரரசு நிழல் இந்தப் புனித மண்ணில் படரக்கூடாது என்பது. அதற்கான துவந்த யுத்தத்தில், வெள்ளை அசுரர்களை அழிக்க ஆயுதங்தாங்கி போரிட்டுக் களபலியான முதன்மைத் தளபதிகள் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள், அந்த முன்னோடி மறவர்களை முண்டியடித்துக் கொண்டு தியாகிகள் ஆன வீரர்கள் பட்டியல் ஏட்டில் அடங்காதது. "எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும், மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும், தினையளவு நலமேலும் கிட்டுமானால், செத்தொழியும் நாள் திரு நாளாகும்" என்ற சிந்தனை வயப்பட்டவர்கள் அவர்கள் அனைவரும்.