பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

செல்லப்பட்டார்கள் என்பதற்கான விவரங்கள் இல்லை. பெரும்பாலும், கரையும் ஆழமும் காண இயலாத நடுக்கடலில் அவர்களை ஆழ்த்தி கொன்று போட்டு இருக்க வேண்டும் என அஞ்சப்படுகிறது. இன்னும் இந்தப் போராட்டங்களில் நேரடியாக சம்பந்தப்படாது, கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என சந்தேகப்படும் படியான எழுபத்து இரண்டு பேர்களைக் கைது செய்து விலங்கிட்டு தூத்துக்குடி முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களில், சிவகங்கைச் சீமையின் கடைசி மன்னரான சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவரும், சின்னமருது சேர்வைக்காரரது இளைய மகனான துரைச்சாமியும் முக்கியமானவர்கள். பரங்கியர் தாங்கள் கைப்பற்றி ஆட்சி செலுத்தும் தமிழ் நாட்டில், அவர்களுக்கு எதிராக வல்லமை மிக்க வெள்ளைக்கும் பெனியாரை எதிர்த்துப்போராடிய மக்களும் இருந்தனர். என்ற நினைப்பு, தமிழக மக்களுக்கு இனியும் ஏற்படக்கூடாது என்ற இறுமாப்பில் மறவர் சீமையின் எழுபத்து இரண்டு மக்கள் தலைவர்களையும் நாடு கடத்தி உத்திரவிட்டனர். 2வங்கக் கடலின் கீழ்க் கோடியில் தமிழகத்தில் இருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் உள்ள பெங்கோலான் என்ற தீவில் பாதுகாப்புக் கைதிகளாக வைத்து இருக்க முடிவு செய்தனர்.

இந்தத்திவின் உண்மையான பெயர் பூலோ பினாங் என்பதாகும். மலாய் மொழியில் பாக்குத் தீவு என்ற பொருளில் வழங்கப்பட்டது. இந்தத் தீவில் தோன்றி வளைந்து சென்று கடலில் மறையும் சிற்றாறு கூட பாக்குநதி (சுங்கை பினாங்) என்று வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு அந்தத்தீவில் அப்பொழுது பாக்கு மரங்கள் செழித்து வளர்ந்து இருந்தன. மனித இனத்தின் காலடிச் சுவடுகள் மிகுதியாக பதியாத அந்தக் கன்னிநிலத்தில், பாக்கு, லவங்கம், ஜாதிக்காய், மிளகு, அபின் ஆகிய தள்ளா விளையுள் தாழ்விலாச் செல்வமாக விளங்கின. அவைகளைக் கொள்வதற்கு ஒருபுறம் டச்சுக்கிழக்கு இந்தியக் கும்பெனியாரும் மறுபுறம் ஆங்கில கிழக்கிந்தியக் கும்பெனியாரும் கச்சை கட்டி நின்றனர். கி.பி. 1786ல் அந்தத் தீவை, கெடாநாட்டு சுல்தானிடமிருந்து வெள்ளைப் பரங்கிகள் ஆயிரம் ஸ்பானிய டாலர் தொகை ஆண்டுக் குத்தகைக் குப் பெற்றனர். உடனே அந்தத் தீவிற்கு பிரின்ஸ் ஆல் வேல்ஸ்


2 Military Consultations, vol. 289 (24-10-1801) p. 7776.80.