பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தீவு” என்ற புதிய பெயர் சூட்டினர். ஆனால் ஐந்தாண்டு காலத்திற்குள், கெடா சுல்தானுக்கு பெரிய நாமம் சாத்தி அந்தத்தீவைத் தங்கள் தனியுடமை ஆக்கிக் கொண்டனர். இந்த தர்மகாரியத்தைச் சாதித்தவன் பிரான்சிஸ் டே என்ற பரங்கியாகும்.[1]

நமது நாட்டில் ஆட்சியாளராக, அந்தப் பரங்கிகளது நிலைமை உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் தூரகிழக்கு நாடுகளான, சாவகம், புருனை, சீனம், ஜப்பான் ஆகியவைகளுடன் வியாபார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு, இந்தத்தீவு பயனுள்ளதாக அமையும் என அவர்கள் அப்பொழுது கருதினர். ஆனால், நாட்டுப்பற்றும் நேர்மை உள்ளமுங் கொண்ட நல்லவர்களது நச்சுச் சிறையாகவும் அது மாறும் என யாரும் நினைக்கவில்லை. விரைவில் தங்களது ஆட்சியை வங்காளத்தில் துரோகத்திலும் துப்பாக்கி முனையிலும் தொடர்ந்ததை வன்மையாக எதிர்த்த தேச பக்தர்களை, சமுதாயக் குற்றவாளிகள் எனப்பெயர் சூட்டி, நாடு கடத்தி, தங்களது ஆட்சிக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாப்புக் கைதிகளாக வைப்பதற்கு இந்தத் தீவைப் பயன்படுத்தினர்[2].

பெற்ற நாட்டையும் பெண்டு பிள்ளைகளையும் பெற்றோருடன் சுற்றத்தையும் பிரிந்து வந்த அவர்களது கண்ணீர்க் கதையின் சிறுபகுதி அரசு ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. அன்றைய நிலையில் தூத்துக்குடிக்கும் மலேயா நாட்டுக்கும் இடைப்பட்ட வங்கக்கடலைக் கடப்பதற்கு ஆறுவார காலம் கப்பல் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆதலால் இந்த எழுபத்து இாண்டு கைதிகள், பாதுகாப்பு வீரர்கள் இருபது பேர் மற்றும் கப்பல் பணியாளர்கள் ஆகியோருக்குத் தேவையான குடிநீர் உணவுப்பொருட்கள், அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் கொண்டு போய் சேர்க்கப்பட்டன.[3] இந்தக் கப்பல் ரூபாய் பதினைந்து ஆயிரம் வாடகைக்கு பம்பாயில் இருந்து வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த எழுபத்திரண்டு விடுதலை வீரர்களையும் இருவர் இருவராக இணைத்து அவர்கள் கைகளில் விலங்குகளைப் பூட்டிக்


  1. பக்கீர் முகம்மது - கெடா வரலாறு (பினாங். 1959) பக்கம் 25-26.
  2. Northcotre Perkinson - Trade with Eastern Seas (1937) p.52
  3. Military Consultations vol. 288 (A) (1 1-2-1802) p. 887-89