பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1

இராமாநாதபுரமும் சிவகங்கையும்

சோழ சீமையை ஒட்டியுள்ள கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தெற்கே வேம்பாற்றங் கரையிலான நீண்ட பகுதி மறவர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. காடும் மேடும் முல்லையும் மருதமும், பாலையும் நெய்தலுமாக அமைந்த இந்த நிலக்கூற்றில் வாழ்ந்த மக்கள் கரடுமுரடான வாழ்க்கையினைக் கொண்டு இருந்தனர். மறமும் மாண்பும் மலிந்த மாபெரும் இனத் தினரான இந்த முதுகுடி மக்களது தலைமகன் சேதுபதி என சிறப்பாக வழங்கப்பட்டார். வில்லேர் சிலை இராமன் அமைத்த வியன்சேதுவின் காவலன் என்ற சிறப்பு நிலையில், மறவர் சீமையின் மன்னர் போற்றப்பட்டனர்.

சோழ பாண்டியரது சாமந்தராக விளங்கிய இந்தக்குடியினர் பிற்காலப் பாண்டியப் பேரரசின் மறைவிற்குப் பின்னர், மதுரை மண்டலத்தில் வடக்கே இருந்து வந்த வடுகரது ஆட்சி தொடர்ந்த பொழுது, அவர்களது ஆதிக்கத்தில் அடங்கியும் அடங்காமலும் தன்னரசு நிலை எய்தினார்கள். தமிழக வரலாற்றில் இவர்களைப் பற்றிய செய்திகள் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. இவர்களில் கி.பி. 1674 முதல் கி.பி. 1710 வரை மறவர் சீமையின் மாமன்னராகத் திகழ்ந்தவர் கிழவன் என்ற ரகுநாத சேதுபதியாகும். அவரது பட்டத்து யானையைச் சிறப்பித்துச் சொல்லுமாறு இந்த மன்னரை ஒரு புலவர் பாடினார்.[1]

“கடிவாங்கு மலர்த்தடஞ்சூழ் சேதுபதி
ரகுநாதன் களி,நல் யானை
அடிவாங்கி முன்னடக்கில் வடகலிங்கம்
கிடு கிடெனும் அங்க தேசம்


  1. 1. தனிப்பாடல் - பெருந்தொகை (1935) பாடல் எண். 1294