பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185


தூத்துக்குடித் துறைமுகம் வழியே அனுப்பப்பட்ட இந்த விடுதலை வீரர்களைத் தொடர்ந்து சென்னையிலிருந்தும், வேறு சில போராட்ட வீரர்களும் பினாங்கு தீவுக்கு பாதுகாப்புக் கைதிகளாகக் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் வடநாட்டில் வெள்ளையனுக்கெதிராக போராட்டம் நடத்தி தியாகியான ஹெகடாவின் சுற்றத்தாரரான கிருஷ்ணா, சின்னையா என்பவர்களும் மராட்டிய மாநில ஆனந்தரங்கம், நெங்கா பண்டா, கரப்புவரிணி சுந்தரலிங்கம், சின்னவீட்டு சதாபரமன் ஆகியோரும் அவர்களில் முக்கியமானவர்கள். இந்தக்கைதிகள் தப்பித்துத் தாயகம் திரும்பி விடாமல் கண்காணிக்கப்பட வேண்டும் எனக் கும்பெனித் தலைமை பினாங் ஆளுநர் ஜார்ஜ் லீத்துக்கு எச்சரிக்கை செய்து இருந்தது. இவர்கள் அனைவரது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் பினாங்கு தீவிலேயே கழிந்தது. அந்தத் தீவினைச் சூழ்ந்துள்ள ஆழ்கடலைப் போன்று, நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட அந்த நல்லவர்களது இதயங்களிலும் கரை காண இயலாத கவலையும் வருத்தமும் விஞ்சி நின்றன.

“தொண்டுபட்டு வாழும் எந்தன்
    தூய பெருநாட்டில்
கொண்டுவிட்டு அங்கு என்னை உடனே
    கொன்றாலும் இன்புறுவோம்... ... ... ... ... ...”

... ... ... என்றுதான் அவர்கள் ஏங்கி ஏங்கி அழுது மடிந்திருக்க வேண்டும்.

என்றாலும், கும்பெனியார் தரப்பில் மனநிறைவு காணப்படவில்லை. இராமநாதபுரம் சிவகங்கைச்சீமை மக்களைப்பற்றிய அச்சமும் குழப்பமும் அவர்களிடம் இருந்து கொண்டே இருந்தன. அதனுடைய வெளிப்பாடுதான் அக்கினியூவின் கோரிக்கை. இந்த நாட்டின் புதிய ஆளவந்தார்களான அவர்களை, எந்தச் சூழ்நிலையிலும் - என்றென்றும் எதிர்த்து மக்கள் மீண்டும் ஆயுதம் தாங்கிப் போராட முடியாத பலவீனமான, கோழைகளை குடிமக்களாகக் கொண்டு சமுதாய அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும். பயந்து பரங்கிகளுக்கு கட்டுப்பட்ட அந்த மக்களைத் தங்களது கூரான துப்பாக்கி முனையைக் காட்டி பயத்தால் குனிய வைத்து நிரந்தரமாக அடக்கி ஆள முடியும் என்பது அவர்களது கணிப்பு.