பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

குடி வாங்கும் கடல் ஏழும் உள்வாங்கும்
நன்னலர் தங்கோட்டை வாசல்
படி வாங்கும் அரசர்மணி முடிவாங்கும்
சேடன் முடி படியுந்தானே!”

இந்த மன்னரது முப்பத்திரண்டு ஆண்டுகால ஆட்சியில் மறவர் சீமையில் எல்லைகள் விரிந்து சோழவள நாட்டில் தென்பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தன. என்றாலும் அவரது ஆட்சியின் மாட்சியில், வீழ்ச்சியும் மெதுவாகத் தொடர்ந்தது.

இவரது படைத் தலைவர்களாக விளங்கிய கள்ளர் தலைவர்களான ரகுநாத தொண்டமானும், நமணத் தொண்டமானும், மன்னரது கட்டளைகளைச் சிறப்பாக நிறைவேற்றி அவரது அந்தரங்க நம்பிக்கைக்கு உரியவர்களாகினர். இந்த அரசியல் உறவுகளை இன்னும் நெருக்கமாக இணைத்து பிணைத்துக் கொள்ள சேதுபதி மன்னர், இவர்களது தங்கை காதலி நாச்சியாரைத் தமது இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.[1] அவர்கள் சேதுபதி மன்னரது கானாட்டுக் கோட்டைகளான திருமெய்யம், குளத்தூர் ஆளுநர்களாகப் பதவி உயர்வு பெற்றனர். கி. பி. 1710ல் மன்னர் மறைந்த பிறகு மறவர் சீமையின் அரியணைக்கு எழுந்த குழப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தன்னிலை பெற்றனர். நாளடைவில் ரகுநாதத் தொண்டமான், திருமெய்யம் குளத்தூர் பகுதிகளை இணைத்து தொண்டமான் சீமை என்ற நாட்டுப்பிரிவை ஏற்படுத்தினார. அப்பொழுது புதிதாக அமைந்த கோட்டை “புதுக்கோட்டை” எனப் பெயர் பெற்றது. அந்த ஊர் அவர்களது தலைமை இடமாகவும் மாறியது.

ஏற்கனவே கிழவன் சேதுபதியின் ஆட்சியில் நாலுகோட்டை பாளையக்காரரான பெரிய உடையாத் தேவருக்கு[2] மன்னரிடத்தில் நல்ல செல்வாக்கு இருந்தது. இராமநாதபுரத்தின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட திருவுடையாத் தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதி தமது மகள் அகிலாண்டீசுவரி நாச்சியாரை, பெரிய


  1. 2 Rathakrishna Iyyer, Manual of Pudukottai State (1932) р.31
  2. 3 மறவர் சீமையின் எழுபத்துநான்கு பாளையங்களில் சிவகங்கையை அடுத்த நாலுகோட்டையும் ஒன்று.