பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடையாத் தேவரது மகன் சசிவர்ண பெரிய உடையாத் தேவருக்கு திருமணம் செய்து கொடுத்து, நாலுகோட்டைப் பாளையத்தின் தகுதியை ஆயிரம் வீரருக்கான பாளையமாக உயர்த்தினார்.[1] மருமகனை தொண்டித் துறைக் காவலராகவும் பின்னர் வெள்ளிக்குறிச்சி [2] மாகாண ஆளுநராகவும் நியமனம் செய்தார். ஆனால் கி.பி. 1725ல் விஜயரகுநாத சேதுபதி மறைவை யடுத்து தோன்றிய ஆட்சிக் கிளர்ச்சியில் அவர் பதவியை இழந்து, தஞ்சை மராத்திய மன்னரிடம் தஞ்சம் அடைந்தார். [3]அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் திருப்பத்தினால் இராமநாதபுரம் சீமையில் ஐந்தில் இரண்டு பகுதிக்கு மன்னராகும் வாய்ப்பை சசிவர்ணத்தேவர் பெற்று கி.பி. 1730ல் “சிவகெங்கைச் சீமை” என்ற புதிய வளநாட்டை நிறுவினார்.[4] மதுரை திருமலை மன்னர் சூழ்ச்சியினால் கி.பி. 1639ல் மறவர் சீமையை ஐந்தாகப் பிரிக்க முயன்ற பொழுது பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த மறவர்கள். அப்பொழுது மறவர் சீமை இரண்டாக, வடபகுதி பிரிக்கப்பட்டதற்கு எவ்வித எதிர்ப்பும் இயற்றவில்லை. அதனை ஏற்றுக் கொண்டனர். என்றாலும், இந்தப் பிரிவினை காரணமாக மறவர் சீமை, தமிழக அரசியலின் தனித் தன்மையை - வலுவை இழந்து வந்தது என்பதை அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் தோலுரித்துக் காட்டின. கிழவன் சேதுபதி அமைத்த இராமநாதபுரம் தன்னரசு, சிவகங்கை பிரிவினை காரணமாக அளவில் சிறிய அரசாகியது.

அதேபோல, பாண்டிய மண்டலம் முழுவதையும் இருதுாற்றாண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திய மதுரை நாயக்க அரசும், ராணி மீனாட்சியின் மறைவுடன், கி.பி 1786ல் அழிந்தது. அந்த அரசின் நிலையில் புதிய ஆளவந்தார் என ஆற்காடு நவாப் தோன்றினார். கி.பி. 1751 ல், நவாப் வாலாஜா முகம்மது அலி


  1. 4 Rajaram Row T. Manual of Ramnad Samasthanam (1891) p. 237.
  2. 5 திருப்பூவணத்தையடுத்து வைகை ஆற்றின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஊர்.
  3. 6. Revenue Consultations, vol. 122; p. 1102
  4. 7. Annasamy Ayyer - Sivaganga Origin and its Litigations (1899) Page. 4