பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

முடிவு! இந்தக் கோரிக்கையைக் கண்டு பீதியடைந்த இராமநாதபுரம் கலெக்டர் மாதம் ரூ. 100/-ஐ பராமரிப்புத் தொகையாக அவர்களுக்கு வழங்க மேலிடத்திற்கு உடனே பரிந்துரை அனுப்பினார். இந்த நடவடிக்கையின் முடிவு என்ன என்பதை அறியத் தக்க ஆதாரங்கள் இல்லை.

3 மயிலப்பன் சேர்வைக்காரர்

ராமநாதபுரம் சீமையில் உள்ள முதுகுளத்துாரை அடுத்துள்ள கிராமம் சித்திரங்குடி. ஆர்க்காட்டு நவாப்பும் கும்பெனி யாரும் கூட்டாக மறவர் சீமையைக் கைப்பற்றி இளம் மன்னரான முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியைத் திருச்சிக் கோட்டையில் அடைத்து விட்டு, மறவர் சீமை மக்களிடம் நிலத்தீர்வை வசூலிக்க முயன்ற பொழுது கொதித்து எழுந்து, சர்க்கார் கூலிகளைத் துரத்தி துரத்தி அடித்தவர்கள் இந்த ஊர் குடிமக்கள். மேல்நாட்டுக் கள்ளர்களை விட கொடுமையானவர்கள் என அவர்களை கும்பெனியாரது ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.1 மண்ணின் மைந்தர்தான் மயிலப்பன் சேர்வைக்காரர். இராமநாதபுரம் சேதுபதி மன்னரது விசுவாசமுள்ள ஊழியர், மானமும் வீரமும் விஞ்சிட களம் பல கண்டவர். அதனால் சேதுபதி மன்னரது அந்தரங்கப்பணியாளராகவும் விளங்கினார்.

அதனால்தான் ஆர்க்காட்டு நவாப்பின் பாதுகாப்புக் கைதியாக ஒன்பதாண்டுகள் திருச்சிக்கோட்டைச்சிறையில் இருந்து வெளிவந்து, மறவர் சீமையின் ஆட்சியில் அமர்ந்த முத்துராமலிங்க சேதுபதி மன்னர், ஆர்க்காட்டு நவாப்பின் ஆதிக்கத்தை யொழிக்க இரசியமாக பிரஞ்சு சக்கரவர்த்தி பதினான்காவது லூயியின் இராணுவ உதவியைக் கோரினார். இந்த முக்கியப் பணியில் பாண்டிச்சேரியில் இருந்த பிரஞ்சு நாட்டு ஆளுநரிடம் ரகசியத் தூது சென்றவர் இந்த மயிலப்பன்தான்.

பின்னர் கி. பி. 1795ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னரை கும்பெனியாரின் வஞ்சனையால் வளைக்கப்பட்டுமீண்டும் திருச்சிக்-


  • Ibid. 8900 (7-2-1833)

1 Collector Lushington’s letter dated (6-5-1799)