பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211


சேர்வைக்காரர் தமது வாக்குமூலத்தில், தன்னுடைய தலைவரது கட்டளைகளுக்குப் பணிந்து செயல்படுவது ஒரு போர் வீரனது கடமையாதலால் தானும் அந்தச் சூழ்நிலையில் செயல்பட்டதாகவும், கடமையை நிறைவேற்றியதற்குத் தண்டனை என்றால் அது தனது விதி வசம் என்று ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப் பிட்டார்.[1]

விதி வலிது என்பதை பாளையங்கோட்டை ராணுவ நீதிமன்ற தீர்ப்புரை உறுதிப்படுத்தியது. மறவர் சீமை மண்ணிலிருந்து பரங்கியரை விரட்டியடிக்கப் பாடுபட்ட குற்றத்திற்காக மயிலப்பன் சேர்வைக்காரருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. என்றைக்கு மருது சேர்வைக்காரர்கள் திருப்பத்தூரில் தூக்கில் தொங்க விடப்பட்டார்களோ அன்றே மயிலப்பன் சேர்வைக்காரரது மரணச் சீட்டும் எழுதப்பட்டு விட்டது, அபிராமத்தில் அந்தத் தண்டனையை நிறை வேற்றுமாறு கும்பெனிப் படையின் தளபதிக்கு உத்திரவு வழங்க சென்னை கவர்னரை நீதிமன்றம் கோரியது. அந்த வேண்டு கோளை ஏற்று கவர்னரும் உத்திரவிட்டார்.[2] ஏற்கனவே மீனங்குடி கனகசபாபதி தேவரது உயிரை உறிஞ்சிய அதே தூக்குமரம், மறவர் சீமையின் மாவீரன் முத்துராமலிங்க சேதுபதியின் விசு வாசமிக்க தொண்டன் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் இணையற்ற தளபதி-மயிலப்பன் சேர்வைக்காரது மூச்சையும் பறித்து அவரது வாழ்வை முடிவுறச்செய்தது.

ஆனால் இராமநாதபுரம், சிவகங்கை சீமைகளில் உள்ளவர்கள் மயிலப்பன் மறைவை உண்மை என்று கொள்ளத் தயங்கினர். கி.பி. 1799 முதல் கி.பி.1801 வரையிலான கும்பெனியாரது ஆவணங்களும் மயிலப்பன் சேர்வைக்காரரை ஒரு சாதாரண குடிமகனாக எண்ணுதற்கு இடமில்லாது மந்திர தந்திரம் மிகுந்த மாயாஜால மனிதனாக நினைக்கும் வகையில்தான் வரைந்துள்ளன. நமது நாட்டு விடுதலை அவரது நினைவுக்கு என்றும் வீரவணக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை.


  1. Ibid vol. 299 (11-6-1802) pp. 4420-29
  2. Military Consultations vol. 299 (5-7-1802) p. 4457