பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219


சிவகங்கை கும்மி (பக்கம் 87) ஆசிரியரது கண்டு பிடிப்பு. ஆனால் தன்னந்தனியாக இருந்த சின்னமருதுவை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தி கும்பெனியார் கைது செய்தனர் என்பது வரலாறு.

இவ்விதம் தமிழக வரலாற்றிற்குப் புறம்பான செய்திகளை இந்த இரு இலக்கியங்களும் அளிக்கின்றன. சிவகங்கை கும்மியை விட சிவகங்கை அம்மானை கூடுதலான செய்திகளைக் கொண்டுள்ளது. அத்துடன், மருது சேர்வைக்காரர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு வேள்விக்கு ஆகுதியாகத் தங்களையே அளித்துத் தியாகிகளான பல போர் மறவர்களையும் இந்த இலக்கியங்கள் இனங் காட்டத் தவறி விட்டன. அவர்கள் குறிப்பாக, சித்திரங்குடி மயிலப்பன், மீனங்குடி முத்துக்கறுப்பத்தேவர், ராஜசிங்கமங்கலம் குமாரத் தேவன், ஜகந்நாத ஐயன், சபாபதித்தேவர், காடல்குடி நாயக்கர், கள்ளர் தலைவர் சேதுபதி, மற்றும் நத்தம், திண்டுக்கல், விருபாட்சி பாளையக்காரர்கள், ஆகியோர் ஆவர்.

ஆனால் பிற்கால எழுத்தாளர்களும், நூலாசிரியர்களும், இவ்வளவு குறைபாடுடைய இந்த இலக்கியங்களில் காணப்படும் செய்திகளை உண்மையான, ஆதாரமான வரலாறாக தங்களது ஆக்கங்களில் அப்படியே பயன்படுத்தி இருப்பது மிகச் சிறந்த விடுதலை வீரர்களான மருது சேர்வைக்காரர்களது மகத்தான வரலாற்று வடிவத்தை மாசுபடுத்தி இருப்பதாகும். மிகச் சாதாரண சேர்வைக்காரர் குடும்பத்தில் பிறந்து, தங்களது உழைப்பாலும், அரிய ஆற்றலாலும், சிவகங்கைச் சீமையின், அரசியல் சமூகத் தகுதிகளை மாற்றி வரலாறு படைத்த அந்த வல்லவர்களை, தமிழ் நாட்டில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை வேரறுக்க விடுதலைப் போரைத் துவக்கிய அந்த விந்தை மனிதர்களை, சிவகங்கைச் சீமையின் மன்னர் பரம்பரையினரைப் போல, வெறும் புகழ்ச்சியாக, மருது மன்னர், மருது அரசர், மருதேந்திரர் மருது துரை என வரைந்து இருப்பதும் விரும்பத்தகாததொன்று.

கி.பி. 1781 முதல் 1801 வரை இருபது ஆண்டுகள், இடையில் ஒரு சில ஆண்டுகள் தவிர, மருது சகோதரர்கள் சிவகங்கைச் சீமையின் பிரதானிகளாகத்தான் பணியாற்றி வந்தனர். கி.பி. 1790 வரை சிவகங்கை ராணிவேலு நாச்சியாரது பிரதானியாகவும் பின்னர் சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரது பிரதானியாகவும் செயல்பட்டனர். சிவகங்கைச் சீமை மக்களுக்-