பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

குத் தேவையானவற்றைச் செயல்படுத்துவதில், மிகுந்த சுயேச்சையுடன் அவர்கள் செயல்பட்டு வந்தபொழுதும், அவர்களது கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், சிவகங்கைச்சீமை மன்னராக அல்லாமல், ராஜமான்யர் என்றே குறிப்பிடுகின்றன. அதேபோல அவர்களுக்கும் கும்பெனித் துரைத்தனத்திற்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களிலும், “சிவகங்கை சேர்வைக்காரர் (பிரதானிகள்)” என்ற சொற்கள்தான் குறிக்கப்பெற்றுள்ளன. சிவகங்கை மன்னர் என்றோ அல்லது பாளையக்காரர் என்ற சொற்றோடர்களோ அவைகளில் காணப்படவில்லை.

7. மருதுபாண்டியர் திருப்பணிகள்

சிவகங்கைச் சீமை மேற்கிலும், தெற்கிலும், சில பகுதிகளைத் தவிர, பெரும்பாலான பகுதி, காடும், மலையும் பாலையும் நிறைந்த வறண்ட பகுதியாகத்தான் இருந்து வந்தது. ஆதலால் அங்குள்ள மக்களுக்கு பெரிதும் விவசாயம் செய்வதற்கான வசதிகள்தான் அன்று தேவைப்பட்டன. காலத்தில் பெய்யும் மழை நீரையும் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று நீரையும் தேக்கி பயன்படுத்துவதற்கான முறையில் மருது சேர்வைக்காரர்கள் ஆங்காங்கு குளங்களையும் கண்மாய்களையும் வெட்டுவித்தனர். மட்டியூர், கண்டிராமாணிக்கம், தெற்குப்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள பெரும் கண்மாய்கள் அவர்களது வளர்ச்சிப் போக்கினைச் சுட்டும் திருப்பணிகளாக உள்ளன. தொண்டி கைக்கோளன் ஊரணியிலும், திருவேகம்பத்து கண்மாய் கலுங்குகளிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், அவர்கள் வாய்க்கால் வகுத்த பாங்கினை பறை சாற்றுகின்றன.

மக்களது பணிக்கு அடுத்ததாக, அவர்கள் மகேசனுக்கு இயற்றிய தொண்டுகளும் ஏராளம். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு தேர்வடித்துக் கொடுத்ததுடன் நிலக்கொடைகளையும் வழங்கியுள்ளனர். அவையும் பிறவும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:

1. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நந்தா விளக்குகளுக்கு ஆவியூர், மாங்குளம், கடம்பங்குளம், சீகன் ஏந்தல், மங்கை ஏந்தல், பூவன் ஏந்தல்.