பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

பெருமாள் கோயில் முகப்பு மண்டபமும், திருப்பத்தூர் வயிரவநாதர் திருக்கோயில் ஆயிரக்கால் மண்டபமும், குன்றக்குடி குமரன் மலைக்கோயில் மண்டபமும் அவர்களால் அமைக்கப்பட்டவை. இவை தவிர, “முள்ளால் எழுதியும் சொல்லால் வழங்கியது” மான அவர்களது அறக்கொடைகள் பற்றிய விபரங்கள் கால மாறுதலில் மறைந்து விட்டன. என்றாலும், அவர்களது அறக்கொடைகளினால் இயங்கிவருகின்ற நிறுவனங்கள். அவர்களது ஆழமான இறையுணர்வையும், மக்களது தேவைகளை மதித்துப் பணிபுரிந்த அவர்களது பொறுப்பு மனப்பான்மையையும் காலமெல்லாம் சுட்டி நிற்கும் சிறந்த வரலாற்றுச் சின்னங்களாக விளங்குகின்றன.

8. மருதுபாண்டியர் வழித்தோன்றல்

சிவகங்கைச் சீமை மண்ணை, தங்களது இரத்தத்தால் நனைத்து சிறப்புமிக்க செம்மண்ணாக மாற்றிய பெருமை மருது பாண்டியர்களையும் அவர்களது தலைமையில் நின்று போராடி, தியாகிகளாகிய பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளையும் சாரும். அவர்கள் அனைவரையும் இனங்காட்டும் ஏடுகள் எதுவும் இல்லை. என்றாலும் கழுமரத்துக் கயிற்றில் தொங்கி, விழுப்புகழ் கொண்ட அந்த “ஏகாதிபத்திய எதிரிகளில்" ஒரு சிலரது விவரங்களை வரலாறு வரைந்துள்ளது. அவர்களது வழித் தோன்றல்களைத் தேடிப்பிடித்து, வாழ்த்துக் கூறிப் பெருமைப் படுத்துவதுடன், அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் நிறைவு செய்ய வேண்டியது இந்தியக் குடியரசின் தலையாய கடமையாகும்.

ஆனால் இருபதாவது நூற்றாண்டில் தேசிய வாழ்வில் தங்களை இணைத்து, இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டு இன்னல்பட்ட விடுதலை வீரர்களும் அவர்களது வழியினரும் மட்டும் தான் இந்திய அரசின் கண்களுக்குப்பட்டது. ஆதலால் அவர்களுக்கு “சுதந்திர சம்மான” மாக உதவித் தொகையை திங்கள் தோறும் வழங்கி வருகிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மண்ணில் வேரோடிய ஆங்கில ஏகாதிபத்திய வெறியர்களின் பேராசையை முளையிலே கிள்ளி எறிந்து இந்த மண்ணின் மானத்தை, மாண்பைக் காப்பதற்காகப்-