பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கியது. ராணி வேலு நாச்சியாரது பாரம்பரிய ஆட்சிக்கு பக்கபலமாக மருது சேர்வைக்காரர்கள். பிரதானிகளாக இருந்து பணியாற்றினார்.16

அதேநேரத்தில், இராமநாதபுரம் சீமையிலும் மக்களது கிளர்ச்சி ஆறுமுகக்கோட்டை மாப்பிள்ளைத்தேவர் தலைமையில் உச்சநிலையை அடைந்தது. வேறு வழி இல்லாமல், நவாப் சிறையில் இருந்த இளம் சேதுபதி மன்னரை விடுதலை செய்து மறவர் சீமையின் மன்னராக அங்கீகரித்தார்.17 மீண்டும், இராமநாதபுரம் அரசு கட்டிலில் அமர்ந்த முத்துராமலிங்க சேதுபதி மன்னர், தமது அரசுரிமையைப் பறித்து தம்மை ஒன்பது ஆண்டு காலம் சிறையில் அடைத்து வைத்து இருந்த நவாப்பையும், அவரது எடுபிடிகளான கும்பெனியாரையும் மறந்துவிடவில்லை. இடையூறு செய்தவர்களை யானை எப்பொழுதும் மறப்பதில்லை அல்லவா ! இதற்கிடையில், நவாப்பிடம் சலுகைகளைப் பெற்று இறுமாந்து இருந்த பாங்கிகள், இராமநாதபுரம் மன்னரை ஒரு தன்னரக மன்னாக மதிக்காமல், நெல்லைச் சீமைப் பாளையக்கார்களிடம் நடந்து கொள்ளும் பாணியில் நடந்து வந்தனர். மேலும் அவரது சீமையில் கைத்தறித்துணி உற்பத்தியை ஏக போகமாகக் கொள்முதல் செய்யவும், தானிய வியாபாரம் செய்வற்கும், சுங்கவரி விலக்கையும் சலுகைகளையும் இராமநாதபுரம் சீமையின் பிரதான துறைமுகமான பாம்பன் நீர்வழிப் போக்குவரத்தில் முன்னுரிமைகளையும் எதிர்பார்த்தனர். ஆனால் மன்னரது உறுதியான நடவடிக்கையால் ஏமாந்து வெறுப்படைந்தனர்.18

அடுத்து, இராமநாதபுரம், சிவகங்கை அரசுகளுக்கிடையே நிலவிய அரசியல் பிணக்குகளை பரங்கிகளது தலைமை அவ்வப் பொழுது தீர்த்து வைத்து சமரசம் செய்து வைக்காமல் அவைகள் பிரச்சினைகளாகி, பெரும் சிக்கல்களாக மாறுவதற்கு உதவினர். இதனால் பகைமை வளர்ந்து இராமநாதபுரம் அரசரும், சிவகங்கைப் பிரதானிகளும் எல்லைப் போர்களில் ஈடுபட்டனர். அதே சமயம், இராமநாதபுரம் மன்னர், புனித சேதுமண்ணில் இருந்து பேராசை பிடித்த ஆற்காட்டு நவாப்பின் மேல் ஆதிக்கத்தையும்


16 Ibid p.27.

17 Military Consultations, vol. 74, (30.4.1781), p.1076,

18 Military Consultations, vol. 190, (25.10.1794), pp 4266-68.